பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


இனி ஓ: ஒ, மகிழ்ச்சிக் குறிப்பு. உய்ந்தோம்-கரை ஏறினோம். இனி-இனிமேல். ஓர் இடரும் இலோம் என்ற உம்மை தொக்கது. இனி ஒர்—இப்போது சிந்தித்துப் பார்: ஓர் வினைக்கு—மூன்று வினைகளில் ஒன்றாகிய ஆகாமியத்துக்கு என்றும் பொருள் கொள்ளலாம். சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்பன மூன்று வகை வினைகள். இவற்றில் நாம் செய்த பழவினைகளின் குவியலுக்குச் சஞ்சிதம் என்று பெயர். இந்தப் பிறவியில் அனுபவிக்க வாய்ந்த பகுதிக்குப் பிராரப்தம் என்று பெயர். இங்கே செய்யும் புதிய வினைக்கு ஆகாம்யம் என்று பெயர். இந்த உடம்பு புதிய வினைகளைச் செய்வதற்குக் கருவியாக இருத்தலின், உடம்பைத் தந்த பிறவியை, வினைக்கு அடல் ஆக்குவிக்கும் பிறவி, மீளாப் பிறவி என்று கூட்டிப் பொருள் கொள்க. பிறவியாகிய கடல், கனைக் கடல்-கனைத்தலை உடைய கடல்; கனைத்தல் — ஒலித்தல், காண்: அசை.]

இறைவன்தாளை இடைவிடாது சிந்திப்பார்க்கு இம்மை இன்பமும் மறுமை இன்பமும் எய்தும் என்பது இப்பாட்டின் கருத்து.

இது அற்புதத் திருவந்தாதியில் 16ஆவது பாட்டு.