பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

விரும்பும் கனியை முன்பு அருள் செய்த அப்பன், இப்போதும் அவர் விருப்பத்தின்படியே, கண்டார் அஞ்சி ஒதுங்கும் பேய் வடிவத்தைத் தந்தருளினான். புனிதவதியாருடைய உடம்பில் இருந்த தசைகள் மறைந்தன. எலும்புருவம் பூண்ட பேயாக அவர் நின்றார். தேவர்களும் போற்றும் பேயாக உருவெடுத்ததைக் கண்ட உறவினரும் பரமதத்தனும் வணங்கி, அஞ்சித் தத்தம் இடங்களை அடைந்தார்கள்.

புதிய உடம்பு பெற்ற அம்மையார், இறைவனைப் போற்றி, அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை என்ற இரண்டையும் பாடினார். பின்பு கைலைமலை சென்று உமாதேவியாருடன் எழுந்தருளியிருக்கும் பரமசிவனைத் தரிசிக்கவேண்டும் என்ற ஆசை உந்த, வடதிசை நோக்கிப் புறப்பட்டார். அவருடைய உருவத்தைக் கண்டவர்களெல்லாம் அஞ்சினர்கள். “பேய், பேய்!” என்று கூவி ஓடினர்கள். “எம்பெருமானுக்கு என்னை அடையாளம் தெரிந்தால் போதும். மற்றவர்களுக்கு நான் எப்படி இருந்தால் என்ன?” என்று எண்ணி அவர் கைலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். தமிழ் நாட்டைக் கடந்து, அப்பால் வடநாட்டையும் கடந்து கைலைமலையின் பக்கம் அணுகினர். அங்கே தம் காலால் நடப்பதை விட்டுவிட்டுத் தலையினால் நடக்கத் தொடங்கினர்.

கைலைமால்வரையில் என்புருவம் படைத்த காரைக்காலம்மையார் தலையினால் நடந்து ஏறுவதை மேலே எம்பெருமானுடன் வீற்றிருந்த உமாதேவியார் கண்டார். உடனே சிவபிரான நோக்கி, “இதோ இந்த என்புருவம் படைத்த உடம்பு தலையாலே நடந்து ஏறுகிறதே! இதற்கு உள்ள அன்பு தான் என்னே” என்று வியந்தார்.

அப்போது பெருமான் உமாதேவியாரிடம், “இங்கே வரும் பெண்மணி நம்முடைய அம்மை. இந்த என்புருவத்தை வேண்டுமென்று பிரார்த்தித்துப் பெற்றுக்கொண்டாள்”