பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



118


அங்கேயே பறித்து மோந்து பார்க்க விரும்புகிறான். மலர் விற்கிறவன் மலரைப் பறித்து மாலைகட்டி விற்க நினைக்கிறான்.

ஒரு கவிஞன் அங்கே வருகிறான், மலர்க் கொடியை உற்றுக் கவனிக்கிறான். இலைகளின் பசுமையில் மனத்தைச் செருகுகிறான், கொடியின் நளினத்தில் ஈடுபடுகிறான். மலரின் அழகிலே எல்லாவற்றையும் மறந்து நின்றுவிடுகிறான். அந்த அழகநுபவமே அவனுக்கு யோகமாகி விடுகிறது.

இத்தனை பேரும் மல்லிகைக் கொடியைப் பார்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான எண்ணம் உண்டாகிறது. அந்தக் காட்சி அவரவர் உள்ளப்பாங்குக்கு ஏற்ற விளைவை எழுப்புகிறது.

இறைவனுடைய திருக்கோலத்தைக் காண்கிறவர்களும் இப்படிப் பல வகையான உணர்வை அடைகிறார்கள். இறைவன் பொறிபுலன் கடந்து நின்றாலும் யாவரும் காணத் திருக்கோயில்களில் விக்கிரக வடிவில் எழுந்தருளியிருக்கிறான். அந்த உருவம் சிற்ப நலன் பொருந்தியதாக இருக்கிறது. கோயிலில் பூஜை செய்கிறவர்கள் அலங்காரம் செய்து காட்டுகிறார்கள். வண்ண வண்ண மலர்மாலைகள் புனைந்து அழகு செய்கிறார்கள். விழாக் காலங்களில் சிறப்பான அலங்காரங்களைச் செய்கிறார்கள். உற்சவ மூர்த்திக்கு ஹஸ்தம் பாதங்களைப் பொருத்தி ஆடை அணிகள் அணிந்து வெவ்வேறு கோலத்தில் காட்சியளிக்கும்படி செய்கிறார்கள். நாளுக்கு ஒர் அலங்காரம்; தினத்துக்கு ஒரு வாகனம். மேளதாளம், வாணவேடிக்கை, பஜனை, வேதபாராயணம் — இவ்வளவு கோலாகலத்துடன் இறைவன் எழுந்தருளுகிறான். அப்போது க்ண்கொள்ளாத காட்சியாக இருச்கிறது. நெடுந்தூரத்தில் உள்ளவர்கள் எல்லாம் இந்த விழாக்காட்சியைத் தரிசிப்பதற்காக வந்து கூடுகிறார்கள்; இறைவனைத் தரிசித்து மகிழ்கிறார்கள்.

மிகப் பழையதாகிய உலகம் இறைவன் படைத்தது. அவனே உலகத்துக்கு ஆதியாக இருக்கிறவன்.