பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


“அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு”

என்று திருவள்ளுவர் சொல்கிறார். அவன் எல்லா உலகுக்கும் ஆதி. தொல்லுலகுக்கு ஆதியாய் நின்ற அரன் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டுப் பல்வேறு வடிவம் எடுத்து வருகிறான். அப்படி அவன் எடுத்த வடிவங்களையெல்லாம் விக்கிரக வடிவில் பெரியோர்கள் அமைத்து எல்லாரும் கண்டு மகிழும்படியும் வழிபடும்படியும் செய்திருக்கிறார்கள்.

அப்படி உள்ள வடிவங்களைக் காண்கிறவர்கள் ஒரே மாதிரியாகப் பார்ப்பதில்லை. அவரவர்களுடைய இயல்புக்கு ஏற்றபடி பார்வை இருக்கிறது. அப்படிப் பார்க்கிறவர்களை ஒரு வகையில் மூன்று வேறு பிரிவினராகப் பிரித்துச் சொல்லலாம்.

ஆண்டவன் திருவிதி உலா வருகிறான். அமெரிக்க நாட்டிலிருந்து வந்தவன் அந்தக் காட்சியைப் பார்க்கிறான். மலர்மாலைகளும் அலங்காரங்களும் அழகாக இருக்கின்றன. அவற்றைக் கண்டு மகிழ்கிறான். இறைவனுடைய திருவுருவத்தைப் பார்க்கிறான். சிற்ப எழிலை வியக்கிறான் கையில் வைத்திருக்கும் காமிராவைத் தட்டிப் படமும் எடுத்துக் கொள்கிறான். அவன் கண்களுக்கு ஆண்டவன் அழகிய சிற்ப வடிவாகத் தெரிகிறான். அழகைச் சுவைக்கும் கண்களுக்கு அந்தக் கோலம் இன்பத்தை ஊட்டுகிறது.

அமெரிக்காக்காரன் என்ன? நம் நாட்டிலும் இப்படி வரும் இறைவன் கோலத்தைக் கண்டு, “நன்றாக அலங்காரம் செய்திருக்கிறார்களே!” என்று மதிப்புரை கூறுகிறவர்கள் பலர் உண்டு. இத்தனை மாலைகளை எங்கே வாங்கினர்கள்?" என்று ரசிக்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் யாவரும் கண்ணிற் கண்ட காட்சியைச் சுவைக்கிறவர்கள். கண்ணில் மட்டும் நிறுத்திப் பார்க்கிறவர்கள், சிறிது நேரம் இந்த