பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


அழகை நின்று பார்க்கிறவர்கள். இவ்வாறு பார்க்கிறவர்களுக்கும் மகிழ்ச்சி உண்டாகும்படி இறைவன் காட்சி தருகிறான்.

தொல்லுலகுக்கு
ஆதியாய் நின்ற அரன்,
காண்பார்க்கும் காணலாம் தன்மையனே!

என்று இந்த வகையினரை நினைந்து பாடுகிறார் காரைக்கால் அம்மையார்.

மற்றொரு வகையினரைப் பார்க்கலாம். அவர்களும் இறைவன் திருக்கோல அழகைக் கண்டு மகிழ்கிறார்கள். ஆனால் அவர்கள் பார்வையிலே ஆழம் இருக்கிறது. வெறும் வடிவத்தை மட்டும் அவர்கள் காண்பதில்லை. வெறும் கண் பார்வையோடு அவர்கள் நிற்பதில்லை. அவர்களுடைய பார்வையில் கருத்தும் கலக்கிறது. கண்ணும் கருத்தும் இணைந்து பார்க்கும் பார்வை அது. கண், வடிவத்தின் அழகிலே ஈடுபடும்போது கருத்து, "இவன் நம்மை ஆண்டருளும் இறைவன்” என்ற எண்ணத்தைக்கொள்கிறது; பார்வையில் ஒர் ஒட்டுறவும் இணைகிறது. அழகும் அந்த உறவுணர்ச்சியும் சேரும்போது அவர்கள் பார்ப்பதோடு நின்று விடுவதில்லை. “நம் இறைவன்” என்ற அன்புள்ளம் உந்துவதனால் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்.

நாம் தெருவிலே போகும் போது எவ்வளவோ பேரைப் பார்க்கிறோம். அழகிய உருவம் உடைய ஒருவர் போகிறார். அவரைக் கண்டு வியப்போம். ஆனால் அவர் நம்முடைய நண்பராகவோ, நமக்குப் பழக்கமான பெரியவராகவோ, இருந்தால் கை எடுத்து அஞ்சலி செய்கிறோம். நமக்குத் தெரிந்தவர் என்பதை அந்த அஞ்சலி காட்டுகிறது. அந்த இருவரையும் வேறு ஒருவர் பார்த்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் பழக்கம் உள்ளவர் என்பதை அந்த அஞ்சலியினால் அறிந்து கொள்வார்.