பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

அப்படியே இறைவனிடம் அன்புடையவர் அவனுடைய திருக்கோலத்தைக் கண்டால் கையெடுத்து அஞ்சலி செய்வார்கள். வெறும் அழகுக் கோலத்தைக் கண்டு அந்த அளவிலே நின்றவர்களுக்கு ஒரு வகையில் இன்பம் உண்டாகிறது. ஆனால் அன்பர்கள் கண்டால் அவர்களுக்கு உண்டாகும் இன்பம் அதைவிடப் பெரிது. முன்னாலே, கண்டவர் கண்களால் மட்டும் கண்டவர்கள். இவர்களோ கைதொழுது காண்பவர்கள். இவர்களுக்கும் இறைவன் காட்சி தருகிறான். அந்தக் காட்சியிலே இவர்கள் மனம் உருகுகிறார்கள்.

கைதொழுது
காண்பார்க்கும் காணல் ஆம்.

இனி மூன்றாவது வகையினர் வருகிறார்கள். அவர்கள் எப்படிக் காணுகிறார்கள்? முதலில் பார்த்தவர்கள் கண் ஒன்றையே கொண்டு வடிவத்தைப் பார்த்தார்கள். அடுத்தபடி கண்டவர்கள் கண்ணோடு கருத்தையும் இணைத்து, எம் இறைவன் என்ற நினைவோடு கைதொழுது பார்த்தார்கள். மூன்றாம் நிலையில் இருப்பவர்களோ, கண்ணாலும் பார்த்தார்கள்; கருத்தோடும் பார்த்தார்கள். அவர்களுடைய உள்ளத்தில் இறைவன்பால் முறுகிய அன்பு இருக்கிறது; அவனுக்காக எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்துவிடும் காதலே இருக்கிறது. அவர்கள் காண்கிறார்கள். கண்ணோடும் கருத்தோடும் கண்டவர்கள் இப்போது கண்ணை மூடிக்கொள்கிறார்கள். கருத்து மட்டும் தொழிற்படுகிறது. சித்தத்தில் அவனைச் சிறைப்படுத்துகிறார்கள். சிந்தையில் காதலால் காண்கிறார்கள். அப்போது அவர்களுக்கு உண்டாகும் அநுபவம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது! அவர்களுடைய காதல்மயமான சிந்தையில் இறைவன் சோதிப் பிழம்பாகத் தோன்றுகின்றான். அவர்களுக்கு இப்போது எல்லாம் மறந்து போகின்றன. உண்முகக் காட்சியிலே ஈடுபட்டுப் போகிறார்கள். மாறிலா மகிழ்ச்சியில் மலர்ச்சி பெறுகிறார்கள். அவர்களுக்கு இறைவன் உள்ளே புகுந்து சிந்தையுள்ளே சோதியாய்த் தோன்றுகிறான்.