பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. எப்படிச் சொல்வேன் !


கடவுள் ஒருவரே. அவரைத் தத்தமக்கு விருப்பமான வடிவத்தில் கண்டு அன்பர்கள் வழிபடுகிறார்கள். அவரவர்கள் தாம் வணங்கும் வடிவில் உள்ளவனே மேலான தெய்வம் என்று சொல்கிறார்கள்.

பொம்மைப் பிஸ்கோத்து என்று கடையில் விற்பார்கள். மனிதரைப் போலவும் நாயைப் போலவும் யானையைப் போலவும் குதிரையைப் போலவும் வெவ்வேறு வடிவத்தில் அந்தப் பிஸ்கோத்துகள் இருக்கும். ஒரு வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அந்த வீட்டுக்காரர் இந்தப் பொம்மைப் பிஸ்கோத்தை வாங்கிக்கொண்டு வருகிறார். ஆளுக்கு ஒரு பிஸ்கோத்துத் தருகிறார். ஒவ்வொன்றும் வெவ்வேறு பொம்மை போல இருக்கிறது. ஒரு குழந்தையிடம் யானைப் பிஸ்கோத்து இருக்கிறது. அது, “என்னுடைய பிஸ்கோத்துத்தான் உயர்ந்தது” என்று வாதிக்கிறது. பெண்ணைப் போல உள்ள பிஸ்கோத்தை வைத்திருக்கும் குழந்தையோ தன் பிஸ்கோத்துத்தான் உயர்ந்தது என்று சொல்கிறது. தன் கையில் கிடைத்தது உயர்வானது என்ற பிரமை அந்தக் குழந்தைகளுக்கு உண்டாகிறது.

உண்மையில் எல்லாம் ஒரே சுவையுடைய பிஸ்கோத்துக்களே. அவற்றில் உயர்வு தாழ்வே இல்லை. யானை வடிவமே பெரிது என்று அதைக் கையில் வைத்திருக்கிற வரையில் ஒரு குழந்தை வாதிக்கலாம். ஆனால் உண்ணும்போது எல்லாம் ஒரே சுவை என்று தெரியும். இரண்டு மூன்றை உண்டு பார்த்