பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ix

என்றான். அவன் அருகில் காரைக்கால்பேயார் அணுகவும். "அம்மா!" என்று அழைத்தருளினான் எம்பெருமான்.

தனக்கு அம்மையே இல்லாதவனும், தானே எவ்வுயிர்க்கும் அம்மையாக இருப்பவனுமாகிய சிவபெருமான்; “அம்மா!” என்று அருளியதைக் கேட்ட பேயார், “அப்பா!” என்று கூவியபடியே ஆர்வத்தோடு சென்று அவனுடைய திருவடித் தாமரையில் வீழ்ந்தார். வீழ்ந்து எழுந்த அவரை நோக்கி, “இப்போது உனக்கு என்ன வேண்டும்?” என்று எம்பெருமான் கேட்கவே, மனம் உருகி அவர் சொல்லலானார்? "இறைவனே, என்றும் இறவாத இன்ப அன்பு எனக்கு வேண்டும். இனி மீண்டும் இவ்வுலகில் பிறவாமல் இருக்கும் படி அருள் பாலிக்க வேண்டும். ஒருகால் பிறக்கும்படி நேர்ந்தாலும் உன்னை மறவாமல் இருக்கவேண்டும். அதோடு உன் புகழையே பாடி உன் திருவடிக்கீழ் என்றும் உறையும் படி திருவருள் புரியவேண்டும்" என்று வணங்கி விண்ணப்பம் செய்து கொண்டார்.

இறைவன் அவ்வாறே அருளியதோடு, "தென்னாட்டில் பழையனூரைச் சார்ந்த திருவாலங்காட்டில் நாம் ஊர்த்துவ தாண்டவம் செய்கின்றோம், அந்தத் தாண்டவத்தைக் கண்டு இன்புற்று அங்கே இருந்து கொண்டு நம்மைப் பாடுவாயாக!" என்று திருவாய் மலர்ந்தருளினான்.

அதனைக் கேட்டு அம்மையார் இறைவன் திருவருளை எண்ணி உருகி, அவனை வணங்கி விடை கொண்ட பிறகு திருவாலங்காட்டை நோக்கிப் புறப்பட்டார். தலையாலே நடந்து வந்து அந்த நற்பதியை நண்ணினார்.

அங்கே அண்டமுற நிமிர்ந்தாடும் அப்பனுடைய ஆடலைக் கண்குளிரத் தரிசித்து இரண்டு திருப்பதிகங்கள் பாடினார். பேய்கள் சூழ எம்பெருமான் ஆடுந் திறத்தை அவற்றில் விரித்துரைத்தார். பேய்களின் இயல்பையும் எடுத்துச் சொன்னார். அந்தத் தாண்டவ மூர்த்தியின் திருவடிக் கீழ் என்றும் உறையும் பேறு பெற்றார்.