பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


அரன்-அழிக்கும் கடவுள். நான்முகன்-படைக்கும் கடவுளாகிய பிரமதேவன். என்கோ-என்பேனா? அரிய-பொறிகளுக்கும் அறிவுக்கும் அறிவரிய, பரன்-எல்லோருக்கும் மேலான பரம்பொருள் என்னும் நிலையில் உள்ளவன். பண்பு-அநந்த கல்யாண குணங்கள். உணரமாட்டேன்-உணரும் ஆற்றல் இல்லாத நான். முரண்-வலிமை; மாறுபாடான செருக்கு என்பதும் ஆம். தானவன் என்பது அசுரனைக் குறிக்கும் சொல். இங்கே அரக்கனாகிய இராவணனைக் குறித்தது. அவன் செருக்கினால் திருக்கயிலையைத் தூக்கியபோது இறைவன் ஒரு விரலால் அமிழ்த்தி அவனை நசுக்கினான். தனிவிரல் - ஒற்றை விரல்; ஒப்பற்ற விரல்; என்றது கட்டை விரலை: செற்றான்-ஒறுத்தான்.

செற்றானை, அவனை, எம்மானை, பண்புணர மாட்டேனாகிய யான் இன்று அரன் என்கோ, நான்முகன் என்கோ, அரிய பரன் என்கோ என்று அந்வயம் செய்து பொருள் கொள்ள வேண்டும்.

அவனை என்பது அவன் என்று சுட்டும் கடவுளை என்று பொருள் கொள்ள நின்றது. இன்று என்றது அவனருளால், அநுபவம் பெற்ற செவ்வியைச் சுட்டியது.

'அன்று அரன் என்று சுட்டி அதனோடு நின்றேன்; இன்று இன்னான் என்று சுட்ட முடியாத நிலையில் இருக்கிறேன்" என்பது குறிப்பாகப் புலப்பட்டது.

இறைவன் பலவகைத் தெய்வமாகவும் இருப்பவன் என்பது கருத்து.)

இது அற்புதத் திருவந்தாதியில் உள்ள 18-ஆவது பாடல்,