பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19. அருமையும் எளிமையும்


நம்முடைய புராணங்களிலுள்ள கதைகள் யாவும் தத்துவங்களை உள்ளடக்கியவை. சிவபெருமான் திரிபுரங்களைச் சங்காரம் செய்தான். மும்மலங்களையும் அழிக்கும் ஞான உருவுடையவன் என்பதையே அது காட்டுகிறது என்று திருமூலர் சொல்வார்.

கடவுள் ஒருவரே. அவரே வேறு வேறு வடிவில் அன்பர்களுக்கு அருள் செய்ய எழுந்தருளுகிறார். புராணங்கள் ஒவ்வொரு மூர்த்திக்கு உயர்வு கூறும் தன்மையைக் காணலாம். சிவபுராணங்களில் சிவபெருமானே பரதெய்வ மென்றும் மற்றவர்கள் எல்லாம் அவனுக்குள் அடங்குவர் என்றும் இருக்கும்; அந்தக் கொள்கையை வெளிப்படுத்தும் கதைகளும் இருக்கும். அப்படியே விஷ்ணு புராணங்களைப் பார்த்தால் சிவனைவிடத் திருமால் உயர்ந்தவர் என்ற கருத்தையும் அதற்கு ஏற்ற கதைகளையும் காணலாம்.

சிவ புராணங்களைச் சைவத்தில் ஆழ்ந்த பற்றுள்ள "ஒருவர் இயற்றினார் என்றும், விஷ்ணு புராணங்களை வைஷ்ணவத்தில் ஆழ்ந்த பற்றுள்ள வேறு ஒருவர் இயற்றினார் என்றும் இருந்தால் அவரவர்கள் தம் தம் தெய்வத்தை உயர்த்திக் கூறுவது இயல்பென்று கொள்ளலாம். ஆனால் இரண்டு வகையான புராணங்களையும் ஒருவரே இயற்றியிருக்கிறார். வியாசரே பதினெண் புராணங்களையும் இயற்றினார். அப்படி இருக்க அவர் இரண்டு வேறு விதமாகச் சொல்லலாமா?

ஒரு நாடகக் கம்பெனியில் அண்ணன் தம்பி இருவர் சிறப்பான நடிகர்கள். அவர்களே அந்த நாடகக் குழுவிற்குக்