பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133


கூட்டுத் தலைவர்கள். திங்கட்கிழமை நடைபெறும் நாடகங்களில் அண்ணன் அரசனாக இருப்பான்; தம்பி வேலைக்காரனாக இருப்பான். புதன் வெள்ளிக் கிழமைகளும் அப்படித்தான். செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தம்பி அரசனாக இருப்பான்; அண்ணன் வேலைக்காரனாக நடிப்பான். அவரவர்கள் நடிப்புக்கு ஏற்ப நாடகங்கள் இருக்கும். இந்தக் குழுவுக்கு நாடகங்களை எழுதித் தரும் நாடகப் புலவர் ஒருவர் இருந்தார்.

ஒருவருக்குப் புதன்கிழமைதான் ஒய்வு. அவர் நாடகம் பார்க்கும் போதெல்லாம் அண்ணன் அரசனாக இருப்பான்; தம்பி வேலைக்காரனாக இருப்பான். சில சமயங்களில் திங்கட்கிழமையும் ஒய்வு கிடைக்கும். அப்போதும் அண்ணன் தம்பிகள் அரசன்,வேலைக்காரனாக நடிப்பதைப் பார்ப்பார். மற்றொருவர் செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நாடகம் பார்ப்பார். அவருக்குத் தம்பியே அரசனாகவும், அண்ணனே வேலைக்காரனாகவும் காட்சியளிப்பார்கள். முன்னே சொன்னவர் தாம் பார்க்கும் காட்சிகளிலிருந்து அண்ணனே உயர்ந்த வேஷம் போடுகிறவனென்றும், தம்பியே தாழ்ந்த பாத்திரமாக நடிப்பான் என்றும் தீர்மானித்துக் கொண்டார். பின்னவரோ அதற்கு நேர்மாறாக, தம்பியே உயர்ந்த பாத்திர மென்றும் அண்ணனே தாழ்ந்த பாத்திரமென்றும் எண்ணினார்.

எல்லாக் கிழமைகளிலும் நாடகம் பார்க்கிறவர்கள் அண்ணனும் தம்பியும் சந்தர்ப்பம் போல உயர்ந்த பாத்திரமாகவும் தாழ்ந்த பாத்திரமாகவும் மாறி மாறி நடிப்பார்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொள்வார்கள். அது மட்டும் அன்று. அண்ணன் தம்பி இருவரும் ஒத்த கலைத் திறமையை யுடையவர்களென்றும், உயர்ந்த பாத்திரமானாலும், தாழ்ந்த பாத்திரமானாலும் அவ்வளவும் நடிப்பே என்றும், அதைக் கொண்டு அவர்கள் கலைத்திறமைக்கு உயர்வு தாழ்வு ஏதும் கூடாது என்றும் கலையின் உண்மையைத் தெரிந்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.