பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


சைவ வைஷ்ணவ வேறுபாடுகளும் இத்தகையனவே. இருவகைப் புராணங்களையும் இயற்றிய வியாசர் நாடகம் எழுதிய புலவரைப் போன்றவர். நாடகங்களில் நடிக்கும் அண்ணன் தம்பிகளைப் போன்றவர்கள் சிவபெருமானும் திருமாலும். அவர்களுள் வேறுபாடு இல்லை. இரு வகைப் புராணங்களையும் படித்தால் உண்டாகும் வேறுபாட்டு உணர்ச்சி இந்த உண்மையை உணர்ந்தால் நீங்கும். இல்லையானால் வியாசர் இரு வேறு வகையில் சொன்னார் என்ற குற்றத்துக்கு ஆளாவார். அவர் ஆளுக்குத் தகுந்தபடி சாட்சி சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவர் அல்லவே!

சிவ விஷ்ணு புராணங்களில் வரும் வரலாறுகளை இந்தக் கண் கொண்டு பார்க்க வேண்டும். இறைவன் செய்யும் திருவிளையாடல்கள், அருட்பெருங் கூத்துக்கள், நாடகங்கள் என்பவற்றினூடே பொதித்திருக்கும் உட்கருத்தை உணர வேண்டும்.

திருமாலும் பிரமனும் தான்தானே உயர்ந்தவன் என்று வாதிடச் சிவபெருமான் சோதி மலையாக நின்று தன் அடிமுடியைத் தேடப் பணித்ததாகவும், அவர்கள் காண முடியாமல் அயர்ந்து சிவனே உயர்ந்தவன் என்று அறிந்து கொண்டதாகவும் வரும் புராண வரலாற்றைப் பல முறை நாம் கேட்டிருக்கிறோம்.

திருமால் திருமகளுக்கு அதிபதியாக, எல்லாரிலும் சிறந்த செல்வராக இருப்பவர். செல்வந்தான் எல்லாவற்றிலும் உயர்ந்தது. ஆகவே செல்வம் படைத்தவனே யாரினும் உயர்ந்தவன் என்று செருக்கடையும் பாத்திரமாக அவர் வேஷம் போட்டார். பிரமனே கலைமகளுக்கு நாயகன், படைக்கும் தெய்வம். அறிவாற்றலும் படைப்பாற்றலும் மிக்கவன். அறிவும் படைப்பாற்றலும் உடையவனே உயர்ந்தவன் என்ற கட்சிக்குப் பிரதிநிதியாக வேஷம் போட்டான் அவன்.