பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



135


செல்வத்தாலும் அறிவினாலும் உண்மையைக் காண முடியாது. செல்வச் செருக்கும், அறிவினால் உண்டாகும் செருக்கும் ஒருவனுடைய பண்பைத் தாழ்த்திவிடும். அவர்களுக்கு மெய்ஞ்ஞானம் புலப்படாது. இதை அறிவுறுத்தும் நாடகம் திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய கதை. சிவபெருமான் ஞானத்தின் வடிவாக, சத்தியத்தின் உருவமாக, ஆனந்தத்தின் அடையாளமாகச் சத்திதானந்த மூர்த்தியாக நின்றான். செல்வச் செருக்கும் கல்விச்செருக்கும் உண்மையை உணர மாட்டாமல் தடுக்கும்; மெய்ஞ்ஞானத்தை அடையவும் அமைதியான ஆனந்தத்தைப் பெறவும் அவ்விரண்டும் தடைகள். இந்த உண்மையையே இந்தப் புராணக் கதை புலப்படுத்துகிறது.

இந்த நாடகத்தை மிகமிகப் பழங்காலத்திலேயே இந்த மூன்று நடிகர்களும் நடித்துக் காட்டினார்கள். நாடகத்தின் உட்கருத்து, செல்வச் செருக்கும், கல்விச் செருக்கும் தீயவை என்பது. நாடகத்தைப் பார்க்கிறவர்கள் அந்தக் கருத்தை மனம் கொள்ள வேண்டும்.

அதை விட்டு விட்டு அண்ணனை அரசனாகப் பார்க்கிறவர் அண்ணனே எப்போதும்அரசன் என்று சாதிக்கிறதைப்போல, சிவபெருமானே எல்லாரினும் உயர்ந்தவன் என்று சாதிக்கிறது, இந்தக் கதைக்கு உரிய பயன் அன்று. வியாசர் அந்தப் பயனுக்காகப் புராணத்தை இயற்றவில்லை.

செல்வம் முதலியவற்றால் உண்டாகும் அகங்காரத்தை வரவிடாமல் ஒடுக்குவது பக்தர்கள் இயல்பு. எங்கே அகங்காரம் தலை காட்டுகிறதோ அங்கே ஆண்டவனைக் காண முடியாது. இறைவன் செல்வத்தாலும் கல்வியினாலும் அளப்பதற்கு அரியவன்; அன்பு செய்வாருக்கு அருட்கண் அளித்துத் தன் உண்மையை உணரச் செய்வான்.