பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136


“அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே"

என்பது அப்பர் வாக்கு.

“அருளால் எவையும்பார் என்றான், அதை
அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்;
இருளான பொருள்கண்ட தல்லால் கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி தோழி“

என்பார் தாயுமானவர். அவனருள் கிடைத்தால், இதுவரைக்கும் நாம் பார்த்த பார்வை மருட்பார்வை என்று தெரியவரும். அந்த அருளைப் பெறுவதற்கு வழி யாது? அவனிடம் இடைவிடாது முறுகிய அன்பை வளர்த்தல். அந்த அன்பே அவன் அருளைப் பெறச் செய்யும். அந்த அருளே கண்ணாக நின்று உண்மையை உணர்த்தும்.

அருளினால் உண்மையை உணரவேண்டும் என்ற கருத்தின்றிச் செல்வச் செருக்கும் கல்விச் செருக்கும் மீதூர்ந்து நிற்க, அன்று, பல பல காலத்துக்கு முன்பே, மாலும், நான்முகனும் சிவபெருமான் அடிமுடியைத் தேடினார்கள். அடியும் முடியும் அகப்பட்டால் பொருளின் நீளமோ உயரமோ தெரிந்து விடும் அல்லவா? அவர்களுக்கு அடியும் முடியும் தெரியவில்லை. அதனால் சிவபெருமானுடைய அளவு தெரியவில்லை. அவன் அளப்பரியனாக நின்றான்.

மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை

என்று இதைக் காரைக்காலம்மையார் சொல்கிறார். அன்றும், அளப்பரியன் என்பதில் உள்ள உம்மை, இன்றும் அவன் அப்படியேதான் இருக்கிறான். செல்வத்தாலும் கல்வியாலும்