பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

அதனை அறிந்து கொள்ள முடியாது" என்ற பொருளைத் தந்தது.

அவனை அன்பினால் சாராதவர்களுக்கு அவனை அறியவே முடியாது. எப்டியாவது அவன் காலில் விழும் வாய்ப்புக் கிடைத்தவர்களுக்கு மிக மிக உயர்ந்த நிலை கிடைக்கும். சந்திரன் தக்க யாகத்துக்குப் போனான். மற்றத் தேவர்களும் போனார்கள். அவைதிகமான யாகத்தைச் செய்தான் தக்கன். அகந்தையின் விளைவாக, இறைவனை மறந்து அந்த யாகத்தைச் செய்தான். அவன் சிவபெருமானுடைய மாமனார். யாராக இருந்தால் என்ன? தவறு செய்தவர் தண்டனைக்கு உள்ளாக வேண்டியதுதான். அவன் செய்த அந்த முறையற்ற செயலுக்கு உடந்தையாகத் தேவர்கள் இருந்தார்கள். அவர்களும் குற்றத்துக்கு ஏற்ற தண்டனையை அடைய வேண்டியவர்களே. இறைவன் அவர்களுக்கு உரிய தண்டனையை அளித்தான்.

சந்திரனுக்கும் தண்டனை கிடைத்தது. அவனை இறைவன் காலாலே தேய்த்தான். சந்திரன் அந்தக் காலைப் பற்றிக் கொண்டான். அதன் பயனாக இறைவன் தன் தலையிலே அவனை வைத்துக் கொண்டான்; அவனை சிரஞ்சீவியாக்கி விட்டான். வானத்திலுள்ள மதி தேயும், வளரும். இறைவன் திருமுடியில் உள்ள சந்திரன் தேய்வதில்லை; வளர்வதில்லை. இறைவன் திருவடித் தொடர்பால் இத்தகைய உயர்ந்த நிலை அவனுக்குக் கிடைத்தது. அவன் இறைவனுடைய காலையும் கண்டான்; முடியையும் கண்டான். மாலுக்கும் நான்முகனுக்கும் அளப்பரிவனாகிய இறைவன் சந்திரனுக்கு அளப்பதற்கு எளியனாகி விட்டான். காலைப் பிடித்துக் கொண்டதனால் ஆகிய பலன் இது.

என்றும்ஓர்
மூவா மதியானை

[மூவா - முதுமையை அடையாத.]