பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138


இறைவனைத் தெரிந்து கொள்ள எங்கெங்கோ போய்த் தேட வேண்டும் என்பது இல்லை. அன்பினால் நெக்குருகினால் எந்த இடத்திலும் அவனைக் காணலாம். அவன் எல்லா உலகங்களுமாக இருக்கிறான். இருபத்தோர் உலகங்கள் என்று ஒரு கணக்குச் சொல்வதுண்டு. மேலேழு, கீழேழு உலகம் ஏழு பிரிவாக உள்ளது; ஆக இருபத்தொன்று. 'எல்லா உலகமும் ஆனாய் நீயே” என்று அப்பர் பாடுவார்.

மூவே ழுலகங்கள் ஆவானை.

அப்படி உள்ள பெருமானைக் காண வேண்டும்; காண்பது என்பது இரு வகைப்படும். முகக் கண்ணினால் பார்ப்பது ஒன்று: அகக் கண்ணினால் பார்ப்பது ஒன்று. அகக் கண்ணனாற் பார்ப்பது என்பது எதையோ காட்சியாகக் காண்பது அன்று; அநுபவமாக அறிவதே அது. இறைவனிடம் அன்பு செய்து, அகந்தையைப் போக்கி, அவன் அடியே பற்றாகக் கொண்டு நின்றால் நம் அகக் கண் திறக்கும். அப்போது இறைவனைக் காணும் அநுபவம் கிடைக்கும். அந்த அநுபவமே உண்முகக் காட்சி; அதுவே ஆனந்தம்.

“முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற
மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே
ஆனந்தம்”

என்பது திருமந்திரம். அந்த அநுபவத்தை அறிவென்றும் காட்சி என்றும் சொல்வதுண்டு.

மாலுக்கும் நான்முகனுக்கும் அளப்பரியனாகிய இறைவன் காலைப் பற்றிக் கொண்ட சந்திரனுக்கு உயர்ந்த நிலையை அளித்தான். இவை பழைய கதைகள். இறைவன் தன்பால் அன்பு செய்வோருக்கு உண்மை நிலையை அருளுவான் என்பது அந்தக் கதைகளில் தோன்றும் உண்மை. அது இன்றைக்கும் பொருந்தும்.