பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


இதைத் தம்முடைய அநுபவத்தால் உணர்ந்தவர் காரைக்கால் அம்மையார்.

தேடிக் கொண்டு கொண்டேன்-திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்’

என்று அப்பர் ஆனந்தக் கூத்திடுகிறார், பலர் தேடிய ஒரு பொருள், பல காலமாகத் தேடியும் காண முடியாத பொருள் ஒருவருக்குக் கிடைத்துவிட்டால் அவருக்கு உண்டாகும் ஆனந்தத்தை அளவிட முடியுமா?

அதே நிலையில் உள்ள காரைக்காலம்மையார் சொல்கிறார். அந்தப் பழைய கதை, செருக்குற்ற மாலுக்கும் நான்முகனுக்கும் காணுவதற்கு அரியான் என்று இறைவனைச் சொல்லுகிறது. அன்றும் இன்றும் அளப்பரியவனாக நிற்கிறான் எம்பெருமான். ஆனால் காலைப் பற்றிய சந்திரனுக்கு அருள் செய்தான். இன்று, அவனை உள்ளே காணும் அறிவு, அநுபவிக்கும் அனுபவம் மிகவும் எனக்கு எளிதாகிவிட்டது என்றார். இந்த ஆனந்த அனுபவத்தில் உண்டான பெருமிதத்தால், “இன்று நமக்கு எளிதே' என்று பன்மையினால் சொல்லிக் கொள்கிறார். அவனைக் காணும் அறிவு இன்று நமக்கு எளிதே' என்று தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார்.

இன்று நமக்குஎளிதே; மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை,— என்றும்ஓர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு.

[திருமாலுக்கும் நான்முகனாகிய பிரம தேவனுக்கும் (இன்று போல) அன்றும் அளப்பதற்கு அரியவகை நின்றவனும், என்றைக்கும் முதுமையடையாமல் உள்ள ஒப்பற்ற சந்திரனை