பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143


காரியமே இல்லை என்றும் சொல்லும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது.

எவ்வளவுதான் அவன் சாதித்தாலும் அவன் சிற்றறிவுடையவன்தான். அவன் அறியாதவைகளே அதிகம்.

“கற்றதுகைம் மண்ணளவு கல்லாதுலகள வென்
றுற்ற கலைமடத்தை ஒதுகிறாள்"

என்பது விஞ்ஞானிகளுக்கும் பொருந்தும். சந்திரமண்டலத்துக்குப் போய் அங்குள்ளவற்றைத் தெரிந்து கொண்டாலும், மற்றக் கிரகங்களை இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. எல்லாக் கிரகங்களையும் அறிந்து விட்டாலும் சூரிய மண்டலத்துக்குச் சென்று கால் வைப்பது எளிதென்று சொல்ல இயலாது. அதன் பக்கத்திலேகூடச் செல்லமுடியாது. அந்த அற்புதமும் நடந்துவிட்டால் நட்சத்திரங்களை அளந்தறிய முடியாத நிலையில்தான் இருப்பான். எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் நிலை என்றும் மனிதனுக்கு வரப் போவதில்லை. மனிதன் என்ன? தேவர்களுக்கும் கூடத்தெரியாது.

அப்படியானால் எல்லாவற்றையும் அறிந்தவர் யாரும் இல்லையா? ஒருவன் இருக்கிறான், அவன்தான் இறைவன். அவனே சர்வஜ்ஞன், முற்றறிவுடையவன்; பரிபூரண அறிவே மயமானவன். சச்சிதானந்தம் என்பதில் சத், சித், ஆனந்தம் என்ற மூன்று சொற்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் இடையிலுள்ள, ‘சித்’ என்பது இந்த முற்றறிவைக் குறிக்கிறது. இறைவனே முற்றறிவுடையவன்; முழுமையும் அறிந்தவன்.

ஞான பரிபூரணனாகிய அவனை எண்ணிப் பார்க்கிறார் காரைக்கால் அம்மையார். எல்லாவற்றையும் அறிந்தவன் அவனே.

அறிவானும் தானே.