பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144


எல்லாவற்றையும் அறிந்தவனாகிய அவனே யாவருக்கும் அறிவிக்கிறான். படித்தவன் ஒருவன் கல்லாதவனுக்குத் தான் அறிந்ததைக் கற்றுக் கொடுக்கிறான். அறிந்தவன் அறியாதவனுக்கு அறிவிக்கிறான். இப்படி அறிவிக்கிறவன், வேறு ஒருவரிடம் அறிந்துகொண்டவன். அவனும் தன் குருவின் மூலம் அறிந்து கொண்டிருக்கிறான். இப்படியே ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு போனால் முதலில் அறிவித்தவன் இறைவன் என்று முடிவாகும். அவன் அறிவிக்க அறிந்தவர்கள் தாம் பெற்ற அறிவை வழிவழியே அறிவித்து வருகிறார்கள். எல்லாருக்கும் அறிவு பரவுவதற்கு மூல புருஷனாக அறிவித்தவன் இறைவனே.

அது மட்டுமா? சிறிய ஆசிரியனிடம் சில ஐயங்களைத் தெரிந்து கொள்ளலாம். அந்த ஆசிரியனால் விளக்கம் பெறாத சந்தேகங்களை அவனைவிடப் பெரிய ஆசிரியனிடம் தெளியலாம். அந்தப் பெரிய ஆசிரியனுக்கும் விளங்காத இடங்கள் இருக்கும். அவற்றை இன்னும் பெரிய ஆசிரியனிடம் அணுகித் தெரிந்து கொள்ளலாம். இப்படி மேலே மேலே போனால் யாவராலும் தெரிவிக்க முடியாத ஐயங்கள் எஞ்சி நிற்கும். அவற்றை இறைவன்தான் தெரிவிக்க முடியும்; அறிவிக்க இயலும். திருமுருகாற்றுப்படை முருகனுடைய ஆறு திருமுகங்களின் செயல்களைச் சொல்லும் போது இந்தக் கருத்தைச் சொல்கிறது.

“ஒருமுகம்
எஞ்சிய பொருளை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே."

ஆகவே முதலில் அறிவிப்பவனும், எல்லாம் தெரிந்ததும் தெரியாததை இறுதியில் அறிவிப்பவனும் இறைவனே.

“அறிவிப்பான் தானே.”

"தானே அறியும் தன்மை பசுவுக்கு இல்லை; பதியாகிய இறைவன் அறிவித்தால்தான் பசு அறிய முடியும். யாரும்