பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145


அறிவிக்காமல் இயல்பாகவே அறிபவன் இறைவன். அறிவித்தால் அறிவது ஆன்மா என்ற கருத்தையும் இது தெரிவிக்கிறது.

அறிவை ஞானமென்றும், அறியும் பொருளை ஞேயம் என்றும், அறிபவளை ஞாதா என்றும் கூறுவர். இந்த மூன்றயும் ‘திரிபுடி’ என்றும்,'முப்புடி’ என்றும் வழங்குவர். எல்லாவற்றையும் அறியும் ஆண்டவன் எல்லா உயிர்களுக்கும் அறிவிப்பானாக, காட்டுபவனாக இருக்கிறான்.

ஜடம் அறியாது; பசுவும் இயல்பாக அறியாது. ஜடம் அறிவித்தாலும் அறியாது; பசு அறிவித்தால் அறியும். அறிவற்குரிய கருவியாகிய அறிவு, பசுவாகிய ஆன்மாவிடம் இருக்கிறது. அறிவு நுட்பமானது. நுட்பமான யாவும் இறைவன் மயம். ஆகவே அறிவும் அவன்தான். அறிவாகிய கருவியாக இருந்து அறிகின்றவனும் அவன்தான். உயிர் அறிவைப் பெறும்போது அதனிடம் தெய்வத்தின் அம்சம் உண்டாகிவிடுகிறது. அவன் பேரறிவுடையனாகும்போது அந்த அறிவே இறைவனாகிறது. அதைக் கருவியாகக் கொண்டு அறிவாலும் இறைவனாகி விடுகிறான். மாணிக்கவாசகர் அறிவாற் சிவன் என்பது திண்ணம் என்று எழுதுவார் சிவஞான முனிவர். அமமையார் இதைச் சொல்கிறார்.

அறிவாய் அறிகின்றான்தானே.

அறிவு என்பது ஏதேனும் ஒன்றை அறிவது. அறியப்படும் பொருள் ஒன்று இருக்க வேண்டும். அறிபவன், அறிவதற்குரிய கருவியாகிய அறிவு இரண்டும் அவனே என்று சொன்ன காரைக்காலம்மையார் அடுத்தபடி மூன்றாவதாக உன்ள அறியப்படும் பொருளும் அவனே என்கிறார்.

அறிகின்ற
மெய்ப்பொருளுந்தானே.

நா.—10