பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146


நாம் காணுகின்ற நிலையாத பொருள்களுக்கப்பால் மெய்யான பொருள் ஒன்று உண்டு. அதனை மெய்ப்பொருள், செம்பொருள் என்பார்கள். அதுவே பரம்பொருள், இறைவன்; மெய்யறிவாக நிற்பவன். அதனாற் காணும் மெய்ப் பொருளாகவும் அவன் இருக்கிறான்.

அப்படியானால் சில காலம் தோற்றி மறையும் பொய்ப்பொருள்கள் அவனிலும் வேறா?

ஐம்பெரும் பூதங்களாக விரிந்தது பிரபஞ்சம். அவை: நிலையாதவை. நம் கண்ணுக்கு அவைகளே தோற்றம் அளிக்கின்றன. இந்தத் தோற்றங்கள் எல்லாம் அவன்தான். கடலில் அலை தோன்றுகிறது. கடலிலிருந்து கழி பிரிந்து நிற்கிறது. அலை என்றும் கழி என்றும் தோன்றினாலும் எல்லாம், கடல் தான். அவ்வாறே, பிரபஞ்சத்தில் வெவ்வேறு வடிவில் தோன்றுகின்றவனும் இறைவன்தான்.

சிவபெருமானுக்கு, அட்டமூர்த்தி என்று ஒரு பெயர் உண்டு; எட்டு வடிவுடையவன் என்பது பொருள். நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐம்பெரும் பூதங்களும், திங்களும், ஞாயிறும், உயிரும் ஆகிய எட்டும் அவன் வடிவங்கள்.

“இருநிலனாய்த் தீயாகி நீரும் ஆகி
இயமான னாய்எரியும் காற்றும் ஆகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி”

என்று பாடுவார் திருநாவுக்கரசர். எல்லாமே இறைவன்தான்.

விரிசுடர்பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன்

என்று முடிக்கிறார் அம்மையார்.