பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



147

'எல்லாவற்றையும் அறிபவன் அவன் என்று நுட்பமான பொருளைச் சொல்லி, 'நமக்கு அறிவிக்கிறவனும், நம்முள் அறிவாய் நிற்பவனும், நாமாக இருந்து அறிபவனும்' என்று நம்முடன் தொடர்புடையவனாகச் சொல்லி,' மெய்ப் பொருளும் பொய்ப் பொருளுமாக இருப்பவன்' என்று எல்லாம் அவன் தான் என்பதை இறுதியாகச் சொல்லி முடிக்கிறார்.

அறிவானும் தானே அறிவிப்பான் தானே;
அறிவாய் அறிகின்றான் தானே;—அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே ; விரிசுடர்பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன்.

(இறைவன் எல்லாவற்றையும் அறிபவனும் தானாக இருக்கிறான்; உயிர்களுக்கு அறிவிப்பவனும் அவனாகவே இருக்கிறான். அறிவாகவும் அறிகின்றவனாகவும் தானே; அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே; விரிந்த சுடரும் விரிந்த பாரும் விரிந்த ஆகாசமும் ஆகிய அப்பொருள்களும் அவன்.

அவன் - இறைவன்; எழுவாய். 'அவன் தானே அறிவானும், அவன் தானே அறிவிப்பான்' என்று ஒவ்வொன்றிலும் கூட்டிப் பொருள் கொள்க. ‘விரி’ என்பதை, ‘சுடர்’ என்ற மூன்றுக்கும் சேர்த்துக் கொள்க; முதல்நிலை விளக்கு.)

இறைவனே நுட்பப் பொருள்களாகவும் திட்பப் பொருளாகவும் இருக்கிறான் என்பது கருத்து.

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் இருபதாவது பாடல்.