பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21. அட்டமூர்த்தி



ஓர் அழகான மாளிகை. எங்கே பார்த்தாலும் வண்ண வண்ணச் சித்திரங்கள், வேண்டிய வசதிகளெல்லாம் அமைந்த அறைகள், கூடங்கள், அங்கங்கே கட்டில்கள், அலமாரிகள், நாற்காலிகள். இத்தனை அழகான மாளிகையைக் கட்டினவர் மாளிகைக்கு வேண்டிய மூலப்பொருள்களை உள்ளூரிலே உண்டாக்கினார். செங்கற் சூளை போட்டுச் செங்கல்லை அறுத்தார். சுண்ணாம்புக் காளவாய் போட்டார். தம்முடைய காட்டிலிருந்து மரங்களை வெட்டி வந்து பயன்படுத்தினார். மரம், மண், கல் இவ்வளவையும் வைத்துக்கொண்டு மாளிகையை உருவாக்கிவிட்டார். மண்ணைக் குவித்திருந்தபோது பார்த்தால் இதுவே செங்கல்லாகும் என்று தெரியாது. கட்டைகளை அடுக்கியிருந்தபோது பார்த்தால் இவையே கதவாகும் என்று தெரியாது. மூலப்பொருளாக இருந்தவற்றைப் பார்த்தால் அவற்றில் கவர்ச்சி இல்லை. மாளிகையைப் பார்த்தால், பார்க்கப் பார்க்க அழகாக இருக்கிறது.

அவ்வளவு தூரம் போவானேன்? வெறும் களிமண் அழகிய குடமாகிறது; மண் கூஜா ஆகிறது. மண்ணும் நீரும் கலந்து குழைத்து உருவாக்கிக் கனலில் சுட்டபிறகு வடிவும் வண்ணமும் உண்டாகிவிடுகின்றன. பார்க்க அழகிய குடமாக, கூஜாவாகத் தோன்றுகின்றன. வெறும் கட்டையில் அற்புதமான சிற்பத்தைச் செதுக்கவில்லையா?

இப்படி, மனிதன் சில மூலப்பொருள்களை வைத்துக் கொண்டு எத்தனை அழகிய படைப்புக்களைப் படைக்கிறான்! அந்த மூலப்பொருள்கள் இல்லாவிட்டால் அழகான வடிவங்களைப் படைக்க முடியாது.