பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



149

மனிதனுடைய படைப்பே இவ்வளவு அற்புதமானால்' இறைவனுடைய படைப்பின் அற்புதத்தைச் சொல்ல வார்த்தை ஏது? அண்டத்தையும் பிண்டத்தையும் படைத்துத் தந்திருக்கிறான் ஆண்டவன். அண்டம் என்பது பிரபஞ்சம்; பிண்டம் என்பது உடம்பு.

உயிர் குடியிருக்கச் சிறிய வீட்டைப் போல இந்த உடம்பைப் படைத்துத் தந்திருக்கிறான். இந்தச் சிறிய வீட்டைப் போலப் பல கோடி வீடுகளை நடமாடும்படி வைத்திருக்கிறான். இவை அசையும் வீடுகள். இவை யாவும் உலவ மிகப் பெரிய இடமாகிய பிரபஞ்சத்தையே படைத்திருக்கிறான். உடம்பும் சரி, பிரபஞ்சமும் சரி, ஒரே வகையான மூலப்பொருள்களால் ஆனவை. அவை பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் ஐந்து. அந்த ஐந்தே பிரபஞ்சமாக வடிவெடுத்திருக்கின்றன; உடம்பாகவும் உருவெடுத்திருக்கின்றன. அதனால்தான், “அண்டத்தில் உள்ளது பிண்டத்துக்கும்” என்ற பழமொழி எழுந்தது.

ஐந்து பூதங்களால் அமைந்த பொம்மையாகிய, உடம்பு அதே ஐந்து பூதங்களாலான பிரபஞ்சமென்னும் பெரிய மாளிகையில் உலவுகிறது. ஐந்து பூதங்கள் தனித்தனியாகவும் இருக்கின்றன; ஒன்றோடு ஒன்று கலந்தும் இருக்கின்றன; வானாகவும் காற்றாகவும் கனலாகவும் நீராகவும் மண்ணாகவும் இருக்கின்றன; இவையெல்லாம் கலந்த மரமாக, மட்டையாக, வெவ்வேறு பண்டமாக இருக்கின்றன. இந்த அற்புதமான பிரபஞ்ச வீட்டுக்குப் பகலில் ஒளிதரக் கதிரவனாகிய விளக்கையும், இரவில் ஒளிதரத் திங்களாகிய விளக்கையும் ஏற்றிவைத்திருக்கிறான் இறைவன். இவ்வளவு வசதிகளைச் செய்து உடம்பையும் தந்து உயிரை உலவ விட்டிருக்கிறான்.

எந்த விதமான ஆழமான தத்துவ ஆராய்ச்சியும் பண்ணாமல் பார்த்தால், இந்த விரிந்த உலகத்தில் வானமும் காற்றும் அனலும் புனலும் மண்ணும் தெரிகின்றன; சந்திர