பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



150

சூரியர்களைக் காணுகிறோம்; இவற்றினிடையே உயிர் தன் வாழ்வை நடத்திக் கொண்டு வருகிறது. உயிர் இன்ப துன்பங்களை நுகர்வதற்காகவே இறைவன் இவ்வளவையும் படைத்து தந்திருக்கிறான் என்று தோன்றுகிறது. ஐந்து பூதங்களும் சூரிய சந்திரர்களுமாகிய ஏழும் ஜடப்பொருள்கள். உயிர் மட்டும் சித்துப் பொருள்.

இறைவனை நாம் கண்ணிலே காணுவதில்லை. ஏழு ஜடப் பொருள்களையும் காணுகிறோம். உயிர்கள் இருப்பதையும் உணர்கிறோம். எந்த வகையால் உணர்ந்தாலும் அவற்றைப் பிரத்தியட்சம் என்று சொல்வோம். ஜடப்பொருள்கள் ஏழும் புலன்களால் உணர்வதற்குரியவை; பிரத்தியட்சப் பிரமாணத்தால் அறியத் தக்கவை. உயிரை அநுமானத்தால் ஊகிக்கிறோம். ஆகவே இந்த எட்டுப் பொருள்களையும் ஒரளவு அறிவுடையவனும் தெரிந்துகொள்ள முடியும்.

இறைவன் பொறிகளுக்கும் அறிவுக்கும் எட்டாதவன். உடம்பு இயங்குவதைக் கொண்டு அதனூடே உயிர் இருப்பதை உய்த்துணர்ந்து கொள்வது போலப் பிரபஞ்சம் ஓர் ஒழுங்கு முறையில் நடைபெற்று வருவதைக் கொண்டு, அவற்றை அவ்வாறு நடத்தும் ஓர் ஆற்றல், ஒரு சித்துப் பொருள் இருக்க வேண்டும் என்று உய்த்துணர வேண்டும்.

உயிருக்கு வடிவம் இல்லை. ஆனால் தான் எடுத்த உடலையே தனக்கு வடிவாக ஏற்றுக் கொள்கிறது. இந்த வடிவத்தை உயிர் இயக்குகிறது. பஞ்சபூதங்களும் எப்போதும் தொழிற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கதிர்களும் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கின்றன. இவற்றைச் செயற்படுத்தும் ஆற்றலாகிய சித்துப் பொருள் இவற்றினூடே இருந்து இயக்குகிறது. அந்தப் பொருள் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் இந்த ஜடப் பொருள்களையே தனக்குரிய வடிவமாகப் பெற்று இவற்றை இயக்குகிறது.