பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151

இறைவன் குறி குணம் கடந்து நிற்பவன். அவனை வடிவத்தில் பாவித்து வணங்குகிறோம்; வடிவம் அமைத்து வழிபடுகிறோம். ஒவ்வொரு காலத்தில் அன்பர்களுக்கு இறைவன் வெவ்வேறு வடிவத்தில் எழுந்தருளி வந்து அருள் பாலித்திருக்கிறான். விடையேறும் வித்தகனாகவும், தட்சிணாமூர்த்தியாகவும், அர்த்த நாரீசுவரனாகவும். நடராசனாகவும், விநாயகனாகவும், குமரனாகவும், உமையாகவும், வடிவெடுத்து வந்து காட்சி அளித்திருக்கிறான். அவற்றை நினைப்பூட்டிக் கொள்ள அந்த வடிவத்தின் சின்னங்களை வைத்து நாம் பூசிக்கிறோம். இவற்றையே விக்கிரகம் என்றும் திருமேனிகள் என்றும், அர்ச்சை என்றும் மூர்த்திகள் என்றும் சொல்லி வணங்குகிறோம். மூலப்பொருளாகவே எண்ணிப் பக்தி செய்கிறோம்.

ஆனால், இறைவன் எப்போதுமே மேலே சொன்ன ஐந்து பூதங்களையும் சூரிய சந்திரர்களையும் அதிஷ்டித்து நின்று அவற்றை இயக்குகிறான். அவற்றையே தன் மூர்த்தங்களாக வைத்து, உள்ளிருந்து இயக்குகிறான். நாம் வழிபடும் மூர்த்தங்களுக்கும் இந்த மூர்த்தங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு: நாம் வழிபடுபவை நாமாக உண்டு பண்ணுபவை. பஞ்ச பூதம் முதலியவை இறைவனே படைத்துக் கொண்டவை. நாம் வழிபடும் விக்கிரகங்கள் நாம் கண்ட திருமேனிகள். பஞ்ச பூதங்களும் சந்திர சூரியர்களும் அவன் கண்ட திருமேனிகள்.

ஜடமாகிய ஏழு பொருள்களையும் உள்ளிருந்து இயக்குவது போலவே, சித்தாகிய உயிரையும் இறைவன் உள்ளிருந்து இயக்குகிறான். அதனால்தான் அவனே உயிர்க்கு உயிராகி நிற்பவன் என்று பெரியவர்கள் சொல்வார்கள். உடல் இயங்க உயிர் இன்றியமையாமல் இருப்பது போல, உயிர் இயக்கவும் உயிர்க்குயிர் ஒன்று வேண்டும். ஒன்று ஆத்மா; மற்றொன்று பரமாத்மா.