பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

இயக்கப்படுவன எல்லாம் இறைவனுடைய வடிவுகள் என்றால், உயிரும் இறைவனுடைய வடிவென்றே கொள்ள வேண்டும். வடிவத்தையும் வடிவை உடையவனையும் வேறுபாடின்றிப் பார்ப்பது ஒரு முறை. விக்கிரகங்களை இறைவனாகவே பாவிப்பது பக்தர்கள் இயல்பு. "இவன் அவனெனவே” என்று மாணிக்கவாசகர் பாடுவார். நாமாகச் சிலையிலும் செம்பிலும் வடித்த வடிவுகளையே இறைவனின்றும் வேறாக எண்ணாமல் பக்தி பண்ண வேண்டுமென்றால், இறைவன் தானாகக் கொண்ட வடிவங்களையும் அவனாகவே எண்ணி வழிபடுவதும் முறைதான்.

ஆகவே பஞ்சபூதங்களையும் சந்திர சூரியர்களையும் உயிரையும் அவனாகவே கண்டு வழிபடுவார்கள் பெரியவர்கள். இறைவன் இப்படி அமைந்த எட்டு வகை வடிவாகவும் இருப்பதால் அவனை அட்டமூர்த்தி என்று சொல்வார்கள். போன பாடலின் விளக்கத்தில் காட்டிய அப்பர் சுவாமிகள் திருப்பாட்டில், "அட்ட மூர்த்தியாகி" என்று வருவதைப் பார்த்தோம்.

அவனுடைய மூர்த்தங்களை அவனாகவே பாவிக்கும் சிறந்த பக்தி உணர்வில் காரைக்கால் அம்மையார் பாடுகிறார்.

வானத்தில் பகலிலும் இரவிலும் தோன்றிச் சுடர் விடும் கதிரவனையும் திங்களையும் அவர் வேறாகக் காணவில்லை. அந்த இரு சுடரும் சிவபிரானே என்று கண்டு கும்பிடுகிறார்.

அவனே இரு சுடர்.

அவை மட்டுமா? விரிந்து எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வானத்தைப் பார்க்கிறார். எல்லை காண முடியாத அந்த ஆகாசத்தைச் சிவனகவே காண்கிறார். எல்லாவற்றையும் எரித்தும், பக்குவப்படுத்தியும், ஒளிதந்தும் நிலவும் தீயும் சிவனாகவே தோன்றுகிறது.

அவனே தீ ஆகாசம் ஆவான்.