பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

அவை மட்டுமா? நமக்கு ஆதாரமாக இருந்து நம்மைத் தாங்கும் புவியும் அவன்தான். நமக்கு உணவாகவும் உணவை உண்டாக்க இன்றியமையாத கருவியாகவும் இருக்கும் புனலும் அவன்தான். நமக்கு மூச்சுக் காற்றாக நிற்கும் வாயுவும் அவன்தான்.

அவனே புவி புனல் காற்று ஆவான்.

இதுவரையில் சொன்னவை ஜடமாகிய ஏழு பொருள்கள். இனி, சித்துப் பொருளாகிய உயிரைச் சொல்ல வருகிறார். அட்டமூர்த்திகளில் யஜமானன் என்று உயிரைக் குறிப்பார்கள். வேள்வி செய்யும் தலைவனுக்கு யஜமானன் என்று பெயர். தமிழில் இயமானன் என்று வரும். உயிர்களில் மனிதன் உயர்ந்தவன். மனிதர்களில் வேள்வித் தலைவன் உயர்ந்தவன். ஆதலின் அட்டமூர்த்திகளைச் சொல்லும் போது இயமானனைச் சொல்வர். உயிர் என்றும் சொல்வதுண்டு. காரைக்காலம்மையார் இயமானன் என்றே சொல்கிறார். முன்னே சொன்ன ஏழோடு இயமானனும் சேர்ந்து இறைவன் எட்டு மூர்த்தங்களை உடைய அட்டமூர்த்தியாக விளங்குகிறான்.

இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய்.

இவ்வாறு இறைவன் இருப்பினும் இவற்றை எல்லாம் கடந்து நிற்கிறான் அவன். சிற்றறிவுடைய உயிரையும் தன் வடிவங்களில் ஒன்றாக மேற்கொண்டிருந்தாலும் அவன் முற்றறிவுடையவன்; எல்லாம் அறிந்த ஸர்வஜ்ஞன்; பூரண அறிவுடையவன். அவன் ஞானமே வடிவானவன்; ஞானமயன். -

பஞ்சபூதங்களென்றும் இரு சுடரென்றும் இயமானனென்றும் சொல்லி விட்டதைக் கொண்டு அவனை எல்லைக்குள் அடக்கி வைத்து, அளவுக்குள் அடங்குபவன் என்று நினைக்கக்கூடாது; அவன் பரம சூக்குமமான ஞானசொரூபி என்பதை நினைவுறுத்துகிறார்.