பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22. பிறையும் பாம்பும்



காரைக்கால் அம்மையார் இறைவனிடம் நெருங்கி அன்பு செய்யும் பேரன்புடையவர். அன்பர்கள் இறைவனுடன் நெருங்கிப் பேசும்போது பலவகையில் அசதியாடுவது—பரிகாசமாகப் பேசுவது—உண்டு. அப்பர் சுவாமிகள், சுந்தர மூர்த்தி நாயனார் முதலியவர்களின் திருவாக்கிலும் இப்படி வேடிக்கையாகப் பேசும் பாடல்கள் உண்டு. காரைக்கால் அம்மையாரும் அவ்வாறு பேசும் இயல்புடையவர். முன்பு ஒரு பாட்டில், "ஐயோ! இந்தப் பாம்பை இறைவனுடைய மார்பில் சேரும்படி செய்யாதீர்கள்! அது உமாதேவியை ஏதாவது செய்துவிட்டால்? அது மகா பாவம்" (13) என்று சொன்னதைப் பார்த்தோம். இறைவனையே முன்னிலைப் படுத்தி அசதியாடும் இடங்களும் உண்டு.

இப்போது அத்தகைய பாடல் ஒன்று வருகிறது.

இறைவன் பிறையை அணிந்திருக்கிறான். பாம்புகளை அணிகலனாகப் பூண்டிருக்கிறான். பொதுவாகச் சந்திரனுக்கும் பாம்புகளுக்கும் பகை என்று சொல்வார்கள். கிரகண காலத்தில் இராகு கேதுக்கள் சந்திரனை விழுங்குவதாகக் கொள்வது உலக வழக்கு. அதிலிருந்து உண்டானது இந்த எண்ணம். பாம்புக்கும் சந்திரனுக்கும் பகை என்று சொல்லி அதனடியாகப் பல கற்பனைகளை அமைப்பது கவிஞர்களின் வழக்கம். இப்படி வரும் கவிஞர் மரபுகளைக் கவிசமயம் என்பார்கள். இயற்கையிலே இப்படி நடக்கும் என்று நாம் எண்ணக் கூடாது. இவை யாவும் கற்பனை. அடிப்பட்ட வழக்கு ஆதாரமாக இருப்பதனால் இந்தக் கற்பனை நமக்கு விளங்குகிறது. இந்தப் பொய்யை—தீமையில்லாத பொய்யை—நாம் சுவைக்கிறோம்.