பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

விடலாம் என்று இறைவன் திருக்கழுத்தைத் தேர்ந்தெடுத்தது. ஆகவே அங்கே வந்து, தன் நீர்மை பின்னும் நன்றாக இருண்டு அமையும்படி இரவு தங்கிவிட்டதாம். இப்படிக் கற்பனை பண்ணும்படி இறைவன் திருக்கழுத்து அமைந்திருக்கிறது. 'இரவின் நீர்மையாகிய இருள் பின்னும் இருண்டாற் போன்ற திருக்கழுத்தை உடையவரே!' என்று விளிக்கிறார். இத்தகைய கண்டத்தையுடைய எம்பெருமானரே!” என்கிறார்.

வந்துஓர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர்! எங்கள்
பிரானீர்!

கழுத்திலே இரவின் இருளைப் போன்ற கருமை இருந்தாலும் இறைவன் தன் சென்னியிலே பிறையை அணிந்திருக்கிறான். இரவும் பிறையும் இணைந்திருப்பது உலக இயல்பு. இங்கே இரவின் இருள் ஒரு பக்கம் ஒதுங்கியிருக்கிறது; பிறை ஒரு பக்கம் இருக்கிறது. அந்தப் பிறை இறைவனிடம் அடைக்கலம் புகுந்தது. தக்கன், "நீ தேய்ந்து மாய்ந்து போவாயாக" என்று சாபம் இட்டான். அது கண்டு சந்திரன் இறைவனிடம் அடைக்கலம் புகவே, அவனைத் தன் தலையிலே எடுத்து அணிந்து கொண்டான். அது முதல் அவன் தேயாமல் வளராமல் என்றும் ஒரே நிலையில் இருக்கிறான். வளர்வதும் தேய்வதும் இல்லாத சிரஞ்சீவித் தன்மையைப் பெற்று விட்டான்.

இப்போது அந்தப் பிறைக்கு ஆபத்து வந்துவிடும் போலல்லவா இருக்கிறது? அச்சத்தினால் பேசுகிறவர்கள் முன் பேசுவதைப் பின்னும், பின் பேசுவதை முன்னும் பேசுவார்கள்; “போச்சு, போச்சு!” என்று கத்துவார்கள். எது போயிற்று என்று விளங்காது. பிறகுதான் விளங்கும். அவ்வாறே, அம்மையார் சொல்லத் தொடங்குகிறார். முதலில் சிவபெருமானை விளிக்கவில்லை.