பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

"ஐயோ! இதற்கு ஆபத்து வந்துவிடும்போல் இருக்கிறதே!” என்று தொடங்குகிறார், “எதற்கு ஆபத்து? யாரால் ஆபத்து வந்து இதைச் சாப்பிட்டுவிடும் போல இருக்கிறதே!" என்கிறார்.

வந்து இதனைக் கொள்வதே ஒக்கும்!
எதைக் கொள்ளும்? எதுகொள்ளும்?

'உம்முடைய திருமேனியிலே தேவரீர் அணிகலனாக அணிந்திருக்கிறீரே, அந்தப் பாம்பைத்தான் சொல்கிறேன். அது வாள் அரவு; கொலை செய்யும் அரவு அல்லவா?”

"இந்தப் பாம்பு அப்படிச் செய்யாது.”

"நான் நம்ப மாட்டேன். பாம்பு என்றால் படையும் நடுங்கும். பாம்புக்கும் பிறைக்கும் பகை என்பதை உலகம் அறியும்; ஆகவே இந்தப் பாம்பு நல்ல பாம்பு என்று நான் நம்பமாட்டேன். இது எந்தச் சமயத்தில் ஆபத்தை உண்டாக்குமோ? இதன் திருட்டுப் புத்தியைத் தேவரீர் நன்றாக ஆராயவேண்டும். ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.”

இவ்வாளரவின்
சிந்தையது தெரிந்து காண்மினோ?

[இந்தப் பாம்பின் எண்ணத்தை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள். வாள்—ஒளி என்று பொருள் சொல்வது வழக்கம். தக்கயாகப் பரணி உரைகாரர் வாள் என்பதற்குக் கொலை என்று ஒரு பொருள் கூறுகிறார். அந்தப் பொருளையே இங்கே கொள்வது சிறப்பு. இது கொலைகாரப் பாம்பு, இதனிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்கிறார் அம்மையார்.]