பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24. சோதி தரிசனம்


 இறைவன் திருவருள் அனுபவம் பெற்றவர்கள் அந்த அனுபவத்தை எண்ணி இன்புறுவார்கள்; வியப்பார்கள். பலராலும் முயன்று சாதனங்களை மேற்கொண்டு படிப்படியாக ஏறி அவனுடைய அருளில் தோய்ந்து தம்மை மறக்கும்போது அந்த இன்பம் இத்தகையது என்று எண்ணும் நிலை இராது. தம்மை மறந்து தூங்குபவர்களுக்கே, தூங்கும்போது ஒன்றும் தெரிவதில்லையே! தூங்கி விழித்த பிறகுதானே, "அப்பாடி! சுகமாகத் தூங்கினேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை" என்ற உணர்வு வருகிறது? அதுபோல மனோலயம் பெற்று, அதற்கு மேல் சமாதி இன்பத்தில் திளைப்பவர்களுக்கு அந்த நிலையினின்றும் விழிப்பு நிலைக்கு வந்தபோது, அந்த இன்ப நிலையை நினைக்க நினைக்க ஆனந்தமும் வியப்பும் மீதூரும். முன் அனுபவித்த ஆனந்தம் எல்லாம் மறந்த நிலையில் அடைவது இப்போது உண்டாகும் ஆனந்தம்; ஒர் எக்களிப்பு; ஆனந்த உணர்ச்சி அலையெழும்பும் இன்பக் கொந்தளிப்பு.

இறைவனுடைய திருவுருவத்தை ஒரு மகா பக்தர் தியானிக்கிறார். எம்பெருமானுடைய வடிவம் உண்முகத்தே தெளிவாகத் தெரியும் அளவுக்கு அவருடைய உபாசனை முறுகியிருக்கிறது. தூங்கும்போது கனவில் காணும் பொருள்கள் தெளிவாகத் தெரிவதில்லையா? அதுபோல இந்தத் தூங்காத தூக்கத்திலும் இறைவனுடைய திருவுருவம் தெளிவாகத் தெரிகிறது.

உடல் உணர்ச்சி மறந்து மனம் அந்த உள்மனக் காட்சியிலே ஒன்றிவிடுகிறது. அப்போது ஒரு மாற்றம் உண்டாகிறது. அளவுக்குள் அகப்பட்டதாகத் தோன்றும் அந்த வடிவம் வளர்