பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



169

ஜாக்கிரத்துக்கும் இடைப்பட்ட அந்த நிலையில்தான் அபிராமி பட்டர் 'பெளர்ணமி' என்று சொன்னார். இறைவனைத் தனியே வேறாகப் பார்க்கும் கடைசி நிலை அந்தச் சோதி உருவம். இறங்கும்போது முதலில் பார்ப்பது அந்தச் சோதி உருவம்.

மேலே ஏறுகையில் அந்தச் சோதி உருவம் தோன்றும் போது, 'இனி அனுபவ எல்லைக்குள் புகுந்து விடுவோம்' என்ற எண்ணம் தோன்றாது. இயல்பாகவே சோதி நிலையிலிருந்து அகண்ட நிலைக்கு நழுவி விடுவோம்.

ஆனால், விழிப்பு நிலையில் மீண்டும் ஆய்ந்து பார்க்கும்போது அந்தச் சோதி நினைவுக்கு வருகிறது. எல்லா வடிவமும் அதற்குள்ளே கரைந்துவிடும். ஆகவே அது ஆண்டவனுடைய மூல வடிவம்; அதாவது அதற்கு அப்பால் வடிவம் இல்லை.

இந்தச் சோதி வடிவக் காட்சியைக் காரைக்கால்அம்மையார், ‘காதலால், காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே” (17) என்று முன் ஒரு பாட்டில் சொன்னார்.

இப்போது அந்தச் சோதியான ஒளி வெள்ளத்தைப் பற்றி விழிப்பு நிலையிலிருந்து எண்ணிப் பார்க்கிறார். அதற்கு மேல் உள்ளது நினைப்பில் தட்டுப்படும் அனுபவம் அல்லவே! இறைவனுடைய மூலத் திருவுருவம், அவனை வேறாகப் பார்க்கும் அந்தச் சோதிதான் என்று தெளிவாக உணர்கிறார். மனத்துக்குள் தோன்றும் அதை அணிமைச் சுட்டினால், 'இது' என்று சொல்கிறார், அதை நினைந்து வியக்கிறார். "இது, அல்லவா ஈசனுடைய திருவுருவம்" என்று ஆச்சரியப்படுகிறார்.

இதுஅன்றே ஈசன் திருவுருவம் ஆமாறு !

இந்த உருவத்தைக் காணும் அளவுக்கு ஏற்றம் பெற்றவர் களுக்குப் பக்குவ உயர்ந்தவர்களுக்கு, பிறகு ஆபத்தே இல்லை. பாதுகாப்பான இடத்திற்குப் போனது போன்ற நிலை அது.