பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

அப்புறம் மேலே போக வேண்டியதுதான். பரமபத சோபான படம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு விளையாடுவர். ஏணியிலே ஏறியும் இறங்கியும் போக வேண்டும். கடைசியில் ஒரு பெரிய பாம்பு இருக்கும். எல்லாவற்றுக்கும் தப்பிக் கொண்டு மேல் வரிசைக்குப் போய்விட்டால் பிறகு பாம்போ ஏணியோ இராது. அடுத்த நிலை பரமபதந்தான். பரமபதத்துக்கு முந்தின வரிசை அது. அதற்குப் போய்விட்டால் அதுவே சேமமான, பாதுகாப்பான இடமாக இருக்கும்; பாம்புக்கும் பயப்பட வேண்டாம்.

சோதி தரிசன நிலையும் அத்தகையதுதான். அதுவரையில் ஏற்றம் உண்டு. அந்த நிலையில் இறக்கம் இல்லை. அது பாதுகாப்பான நிலை. அதை அடைந்துவிட்டால் அடுத்த நிலை நிச்சயமாகக் கிடைத்துவிடும். ஆகவே அந்தப் பெரிய நிலையைப் பெரிய சேமம் என்று சொல்கிறார் அம்மையார்.

இதுஅன்றே என்றனக்கோர் சேமம் !


இப்போது நினைத்துப் பார்க்கும் போது இன்னும் அந்த இன்ப மயக்கம் தெளியவில்லை. சோதியின் எண்ணம் மறைய வில்லை. கீழே வந்தும் மீண்டும் அந்த அனுபவத்தை எண்ணிப் பார்க்கிறார். சிந்தனையில் சுடருருவம் சுழல்கிறது. இன்னும் சுழன்று கொண்டே இருக்கிறது. மின்னும் சுடருருவாக இன்னும் சுழல்கிறதாம். மீண்டு அந்த அனுபவத்தை எண்ணிப் பார்க்கும் போது அந்தச் சோதி - சுடர் - உள்ளத்திலே சுழன்று இன்ப மயக்கத்தை உண்டாக்குகிறது. “மீண்டும் ஆயும் என் சிந்தனையில் மின்னும் சுடருருவாய் அது இன்னும் இங்குச் சுழல்கின்றது” என்கிறார்.

—இதுவன்றே
மின்னும் சுடர் உருவாய் மீண்டு ஆய்என் சிந்தனைக்கே
இன்னும் சுழல்கின்றது இங்கு.