பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



25. எதற்கு?


அன்னைக்கு அவனை நினைத்தால் ஒரு பக்கம் இன்பம் உண் டாகிறது; ஒருபக்கம் துன்பம் எழுகிறது.

சிறிய சிறிய பதவி உடையவர்களெல்லாம் எவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறார்கள்! எவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்கிறார்கள்! பிறருடைய தயவாலே பிழைப்பவர்கள் கூட, அதைக் காட்டிக் கொள்ளாமலே, தாமே சுதந்திரமாக வாழ்பவர்களைப் போலல்லவா தோற்றம் அளிக்கிறார்கள்?

அப்படியிருக்க இந்தப் பெருமான் மட்டும் தன்னைக் குறைத்துக் கொள்வானேன்?

அவன் அருள் செய்ததனால் இந்த உலகம் இயங்குகிறது. மக்கள் வாழ்கிறார்கள். வானம் மழையைப் பொழிகிறது. சூரிய சந்திரர்கள் ஒளியை வீசுகிறார்கள். தேவலோகத்தில் பலபல பதவிகளில் இருப்பவர்கள் யாவரும் அவனுடைய அருளாணையால் வளைய வருகிறார்கள். இந்திரன் கற்பகம், காமதேனு, சிந்தாமணி என்ற அரிய பொருள்களை உடையவனாய், இணையில்லாத போகத்தை நுகர்கிறான். இப்படியே எல்லாத் தேவர்களும் வாழ்கிறார்கள். அவ்வளவு பேருக்கும் வாழ்வளிக்கிறவன் எம்பெருமான். எல்லாருக்கும் உணவும் உறையுளும் வழங்குகிறவன் அவன்.

அத்தகையவன், எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் பெருவள்ளல், கையில் ஓடு ஏந்திப் பிச்சைக்குப் போவது என்றால் பொருத்தமாக இருக்கிறதா? பெரிய மனிதர் வீட்டுக்குப் போய் யாருக்கும் தெரியாமல் வாங்கி