பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

னாலும் குற்றம் இல்லை. எங்கும் போகிறான்; யாரிடமும் பிச்சை வாங்குகிறான். இந்த வெட்கக்கேட்டை யாரிடம் சொல்வது?

அவனை ஈசுவரன் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அவனிடம் இல்லாத ஐசுவரியம் ஏதும் இல்லை. ஐசுவரியம் என்பதே ஈசுவரன் என்றதிலிருந்து வந்தது தானே? "சென்று அடையாத திருவுடையவன்” அவன். அவனிடம் உள்ள செல்வம் குறையாது; கூடாது. அது பூரணமானது. அப்படி இருந்தும் இப்படிப் பிச்சை எடுக்கலாமா?

அவன் தன் தகுதியை எண்ணுகிறானா? நாம் அவனுடைய பெருமையை எண்ணிக் கவலைப்படுகிறோம்; தன் கெளரவத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்ளவில்லையே!'என்று அங்கலாய்க்கிறோம். அவனோ எதையும் எண்ணுவதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையும் எண்ணுவதில்லை. எண்ணாதே எங்கும் பலி எடுக்கிறான்.

தாருகாவனத்து மங்கையர்முன் போய்ப் பிச்சை கேட்டான். திகம்பரனாகச் சென்று பிச்சை கேட்டான். திருமாலின் முன் பிச்சை ஓட்டை நீட்டினான். கையில் கபாலத்தை, வைத்துக் கொண்டு பிச்சை கேட்டான். கபாலி என்று வேறு பேர் பெற்று விட்டான் அவன் எப்படி எங்கே பிச்சைக்குப் போகிறான் என்ற வரையறை உண்டா? எத்தனையோ விதங்களில் அவன் கோலம் கொண்டு ஊரூர்தோறும் பலிக்கு உழலுகிறான்.

பகலெல்லாம் பிச்சை வாங்குகிறான். இராத்திரியிலே அவனுக்கு ஒரே களியாட்டம்; நடளமாடுகிறான். வீதியிலே பிச்சை எடுப்பது கிடக்கட்டும் இரவிலே நடனமாடுகிறானே, அதற்கு அரங்கமா இல்லை? அவன் எங்கே ஆடுகிறான் தெரியுமா? சுடுகாட்டில், நள்ளிரவில் ஆடுகிறான். அந்த ஆட்டத்தைக் கண்டு ரசிப்பவர்கள் ஆர் தெரியுமா? சொன்னால் வெட்கக் கேடு. பேய்கள்தாம் அவனுடைய ரசிகர்கள். அவனைப் பித்தனென்றும் பேயனென்றும் சொல்வது எவ்வளவு சரி என்று இப்போது தெரிகிறது.