பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

அணுகிப் பார்த்தால் செம்பொன் மலை போலுள்ள திருமேனியில் சில தொங்கும் பொருள்களைக் காணலாம்;

அவன் அழகன்; ஆனால் துறவியைப் போலச் சடைகளைப் பூண்டிருக்கிறான். அவன் கழுத்தைப் பார்த்தால் ஒரு கறை. திருமார்பைப் பார்த்தால் எலும்பு மாலையும் பாம்பும் தொங்குவதைக் காணலாம். அழகைக் கண்டு களிக்கலாம் என்று போனால் அச்சம் தரும் இந்தப் பொருள்கள் அந்த மகிழ்ச்சியைத் தடுக்கின்றன.

ஆனால் புற அழகை மட்டும் பாராமல் தத்துவத்தையும் அக அழகையும் பார்க்கும் நுண்ணறிவை உடையவர்களுக்கு அவற்றைப் பார்த்தால் அச்சம் உண்டாகாது. மேலும் அப்பெருமானுடைய பெருமையே தெளிவாகும்.

அவனுடைய பொன்மேனியில் மேற்பகுயில் தலையிலிருந்து சடைகள் தொங்குகின்றன. அவற்றைப் பார்த்தால் பொன் மலையின்மேல் மின்னல் தவழ்வதைப் போலே தோற்றும். அந்தச் சடைகளும் செந்நிறம் பெற்றவையே; 'அழகிய, மணவாளனாகத் தோன்றும் இவன் ஏன் இப்படித் துறவியைப் போலச் சடையைத் தரித்திருக்கிறான்? என்று புறக் கண் கொண்டு நோக்குபவர்களுக்குத் தோன்றும். உண்மையில் அவன் ஞானசொரூபி; சதா யோகியாக இருப்பவன். மங்கையோடு இருந்தாலும் யோகியாக விளங்குபவன். "மங்கையோடிருந்தே யோகுசெய்வானை" என்பது திருமுறை. அவன் இல்லறத்தார் வழிபடும் மங்கலப் பொருளாக விளங்குபவன்; அதே சமயத்தில் பற்றற்று நிற்கும் துறவியருக்கு ஞானவடி வினனாய்த் தோற்றமளிப்பவன். அவனுடைய சடைகள் இந்தக் கருத்தையே புலப்படுத்துகின்றன.

காரைக்காலம்மையார் இறைவன் பொன் திருமேனியில் காணும் பொருள்களைச் சொல்ல வருகிறார். முதலில் சடைகளைச் சொல்கிறார்.