பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181

விட்டன. பொல்லாத பிள்ளைகளைத் திருத்தி நல்ல பிள்ளைகளாக்கி அணைப்பது போன்ற அருமையான அருட்செயல் இது. இறைவனை அடைந்தால் பொல்லாதவர்களையும் நல்லவர்களாக்கி ஏற்றுக்கொள்ளும் பெருங்கருணைப்பிரான் இறைவன் என்பதை அந்தப் பாம்புகள் புலப்படுத்திக் கொண்டு விளங்குகின்றன. ‘தோன்ற விளங்கி மிளிருமே’ என்று பல சொற்களாலே அவற்றின் விளக்கத்தைச் சொன்னதற்குக் காரணம், இறைவனுடைய கருணையை விளக்கும் அடையாளமாக அவை இருப்பதுதான்.

ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பில்-ஞான்றுஎங்கும்
மிக்குஅயலே தோன்ற விளங்கி மிளிருமே,
அக்குஅயலே வைத்த அரவு.

அற்புதத் திருவந்தாதியில் 26-ஆம் பாட்டு இது.