பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



184

வில்லை. மறுபடியும், சொல்கிறேன்.' இவ்வாறு கருத்து அமைய அம்மையார் சொல்கிறார்.

"நீ ஒரு பாம்பைக்கூட உன் திருமேனியிலே பூணாதே" என்று தொடங்குகிறார்.

அரவம் ஒன்று ஆகத்து நீ நயந்து பூணேல்.

[ஒன்றும் என்பதில் உள்ள உம்மை தொக்கது.]

“நீ நயந்து பூணுகிறாய்; நான் பயந்து நடுங்குகிறேன். நான் மட்டுமா சொல்கிறேன்? என்னோடு உள்ள அடியார்களும் சேர்ந்து சொல்கிறார்கள். தொழுது இரந்து பரவிப் பல நாள் சொன்னோம்.”

பரவித் தொழுது இரந்தேம் பன்னாள்,

'உன்னுடைய பராக்கிரமத்தை நான் நன்கு அறிவேன். பொல்லாத அசுரர்கள் மூன்று புரங்களுக்கு அதிபதியாக இருந்து அந்தப் பறக்கும் கோட்டைகளால் உலகுக்குத் தீங்கு விளைத்தார்கள். அந்த மூன்று புரங்களாலும் மக்களுக்குத் தீங்கு விளையுமே என்று உணர்ந்து அவற்றை அழித்தாய். பிறருக்கு வரும் தீங்குகளே மாற்றத் தெரிந்த உனக்கு உனக்கே வந்திருக்கும் தீங்கை உணர முடியவில்லையே! உனக்காகத் தெரியாவிட்டாலும் நாங்கள் எடுத்துச் சொல்லியும் தெரியவில்லையே! பல நாள் எடுத்துச் சொல்லுகிறோம். இனிமேல் இந்த அணிகலம் வேண்டாம்.”

முரண் அழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே!

[முரண்-வலிமை. ஒன்னாதார்-பகைவர்கள் மூ எயில்-திரிபுரங்கள்; எயில்-மதில்.]