பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



28. எங்கும் பாம்பு



"பாம்பை நீ பூண வேண்டாம்; வேறு ஏதேனும் பொன்னாரத்தைப் பூண்பாயாக!” என்று தாயன்பினால் இறைவனைப் பார்த்துப் பேசிய காரைக்கால் அம்மையார், இப்போது எம்பெருமானைக் கூர்ந்து நோக்குகிறார். ஆரம் மட்டுமா பாம்பு? இறைவனுடைய திருமேனியில் எங்கே பார்த்தாலும் பாம்பு, எத்தனை வகையாகப் பாம்புகளை அவன் பயன்படுத்தியிருக்கிறான்! பார்க்கிறவர்களுக்கே குலை நடுங்குகிறது. எப்படி இவற்றை அணிந்து கொண்டிருக்கிறான்? ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டால்? ஐயோ! அதை நினைக்கவே பயமாக இருக்கிறதே! அவனுக்கு உண்டாகும் ஆபத்துக் கிடக்கட்டும். அவனிடம அன்பு வைத்து அவனுடைய திருவருளுக்காக ஏங்கி நிற்கும் பக்தர்கள் காணச் சகிப்பார்களா? அவர்கள் கற்பனையில் கூட ஆபத்தை எண்ண மாட்டார்கள். ஆனால், இதோ கண்கூடாக அவன் நஞ்சு மிகுந்த பாம்புகளையல்லவா அணிந்திருக்கிறான்?

"இதைப் பார்த்த எனக்கே மனம் தடுமாறுகிறதே! எதற்காக இவர் இப்படியெல்லாம் பாம்பை அணிந்திருக்கிறார்? எனக்கு இதைப் பார்க்கிறபோது ஏதோ ஒரு விதமாக வருகிறதே; எனக்கு என்ன நிலை உண்டாக வேண்டும் என்று உளம் கொண்டு இவர் இவற்றை அணிந்திருக்கிறார்? ஐயோ! இதைக் கண்ட எனக்கு என்ன ஆகுமோ, தெரியவில்லையே!” என்று உணர்ச்சி வசப்பட்டு அங்கலாய்க்கிறார் காரைக்கால் அம்மையார்.

இறைவன் பாம்பை எப்படியெல்லாம் பூண்டிருக்கிறான்? ஒரு பாம்பை மார்பில் பூறாகப் புனைந்திருக்கிறான். முதலில் நம்