பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

கண்ணுக்கு பளிச்சென்று அது படுகிறது. கழுத்தைச் சுற்றிக் கொண்டு மார்பிலே மாலை புரளுவது போல புரண்டு கொண்டிருக்கிறது அந்தப் பொல்லாத பாம்பு.

பூணாக ஒன்று புனைந்து.

அது மட்டுமா? சற்றே கண்ணைத் தாழ்த்திப் பார்த்தால் அவன் இடையிலே ஒரு நாகம் தெரிகிறது. அவன் தன் இடையிலே புலித்தோலை உடுத்தியிருக்கிறான். ஆடுகின்ற அழகனாகிய அவன் அந்த உடை நழுவாமல் அதன் மேல் கச்சை கட்டியிருக்கிறான். அந்த புலித்தோலை இறுகப் பிணித்து நழுவாமல் செய்யும் கயிற்றைப் போலே ஒரு நாகப்பாம்பை கட்டியிருக்கிறான். சில செல்வர்கள் ஆடையின்மேல் தங்கஅரைஞாணைப் பூட்டியிருப்பார்கள். இந்தச் செல்வன் மாணிக்கத்தை உடைய அரைஞாணென்றோ என்னவோ, பாம்பைக் கட்டியிருக்கிறான்.

ஒன்று பொங்கு அதனின்
நாணாக மேல்மிளிர நன்கு அமைத்து

இந்த அரைஞாணாகிய பாம்பு பளபளக்கிறது. அதை நன்றாக இறுக்கிக் கட்டிக் கொண்டிருக்கிறான்.

இந்த இரண்டும் போதா என்று பின்னும் ஒன்றைப் புனைந்திருக்கிறான். இடையிலே பாம்பு; மார்பிலே பாம்பு; தலைமேலும் பாம்பு! அவன் தன்னுடைய சடை முடியின் மேலும் பாம்பை அணிந்திருக்கிறான். அந்த முடி பொன் போலப் பளபளக்கிறது. சடையையே பொன்முடி போல வைத்திருக்கிறான். அந்த அழகிய முடிமேலே இந்த கொலைகாரப் பாம்பையல்லவா சூடிக் கொண்டிருக்கிறான்? கீழே, இடையே, மேலே எங்கும் பாம்பு; எல்லாப் பாம்புகளும் கொலை புரியும் நாகங்கள்; கொடிய நஞ்சையுடைய பாம்புகள்.