பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189


கோள்நாகம்
பொன்முடிமேல் சூடுவதும்.

இந்தக் கோலத்தைக் காணும்போது அம்மையாருக்குப் பகீர் என்கிறது. இவ்வளவு பெரிய பெருமான் இவற்றையெல்லாம் ஏன் பூணுகிறார்? என் அறிவுக்கு ஒன்றும் புலப்படவில்லையே! இன்னும் இதைப் பார்த்துக்கொண்டே இருந்தால் எனக்கு என்ன ஆகுமோ, தெரியாது. எதற்காக இப்படி யெல்லாம் செய்கிறார்?' என்று புலம்புகிறார் காரைக்கால் அம்மையார்.

எல்லாம் பொறியிலியேற்கு
என்முடிவ தாக?

தாருகாவனத்து முனிவர்கள் இறைவன் மேற் கோபம் கொண்டு யாகஞ் செய்து பலவற்றை வருவித்து அவனை அழித்து வரும்படி விட்டார்கள். புலி ஒன்றை உண்டாக்கிச் சிவனைக் கொன்று வா என்று அனுப்பினார்கள். இறைவன் அதனை அழித்து அதன் தோலை ஆடையாக அணிந்துகொண்டான். ஆணவமுடையவர்களின் முயற்சிகள் பயன்படா என்பதை உலகுக்குக் காட்டுவதற்காக அந்தத் தோலை இடையில் உடுத்துக் கொண்டான். பிறகு பாம்புகளை விட்டார்கள். அவை மிகவும் கொடிய நஞ்சையுடையவை. அவற்றை இறைவன் கொல்லவில்லை. எல்லாவற்றையும் பற்றி, அணிகலன்களைப் போல அணிந்து கொண்டான். பிறருக்குத் துன்பம் தருகிற பாம்புகள் இறைவனுக்கு ஆபரணங்களாயின. அவனுடைய கருணை, பாம்புகளையும் நல்லவைகளாக ஆக்கிவிட்டது.

அந்தப் பாம்புகளைக் கண்டு அஞ்சிப் பேசுவது போல அம்மையார் பாடுகிறார். அவற்றால் இறைவனுக்கு ஒரு தீங்கும் நேராது என்பதை அறிந்தவர் அம்மையார். என்றாலும் ஒரு கணம் அஞ்சுபவரைப் போல இருக்கிறார்.