பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



193

காணும் செய்திகளைக்கொண்டு குறை கூறுகிறார்கள். அவற்றை முற்றும் கண்டறிவதில்லை. ஏதோ சில இடங்களைக் கண்டு பரிகாசம் செய்யத் தலைப்படுகிறார்கள்.

உண்மை அன்புடையவர்கள் இறைவனுடைய இயல்பைத் தெரிந்து கொள்ள முயல்வார்கள். "ஏன் இவ்வாறு இருக்கிறது” என்று ஐயம் எழுந்தால் ஆழ்ந்து படிப்பார்கள்; சிந்திப்பார்கள். பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

இறைவனுடைய இயல்புகளில் தம் சிற்றறிவுக்குப் புலப்படாத பல இருக்கலாம். நம் அறிவுக்குப் புலப்படாமையால் அவை பயனற்றவை, குறைபாடு உள்ளவை என்று எண்ணக் கூடாது. நாம் எல்லாம் அறிந்த முற்றறிவுடையவர்களா? முற்றும் உணர்ந்தவர் யாரும் இல்லை. அப்படியிருக்க, ஒரு பொருள் நமக்கு விளங்காவிட்டால் அந்தப் பொருளே இல்லையென்றோ, அது குறையுடையது என்றோ சொல்லக்கூடாது. "எனக்கு விளங்கவில்லை" என்று சொல்வதுதான் முறை.

கடவுள் இருக்கிறது. நமக்குக் கண்கூடாகத் தெரிகிறதா? இல்லை அதனால், கடவுள் இல்லை என்று சொல்லி விடலாமா? ஸ்ரீ ராமகிருஷ்ணர் இதை அழகான உவமையால் விளக்குகிறார். பகல் நேரத்தில் வானத்தில் நட்சத்திரங்கள் இல்லை என்று சொல்லலாமா? அதுபோல் கடவுள் நமக்குத் தெரியவில்லை என்பதனால் கடவுள் இல்லை என்று சொல்லுவது முறையன்று' என்கிறார் அந்த மகான்.

நுட்பமான கருத்துக்கள் எளிதில் விளங்குவதில்லை. விளங்காதபோது அவை பயனற்றவை என்று கருதி எள்ளி இகழக் கூடாது. அந்த நுட்பத்தை அறிந்துகொள்ள முயல வேண்டும், நுட்பம் விளங்காத வரையில், "நமக்குப் புரிந்து கொள்ளும் தகுதி வரவில்லையே!” என்றே எண்ணவேண்டும்.

எல்லாக் கருத்துக்களுக்கும் இந்த நியாயம் பொருந்தாது. பெரியவர்களால் சொல்லப் பெற்றுப் பல காலம் பலருடைய,


நா. — 13