பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196


அந்த எலும்பு எல்லாத் தேவர்களின் பதவிகளும் ஒரு காலத்தில் அழித்துவிடும் என்பதைக் காட்டுகிறது. தன்னுடைய அருளாணையின்படி ஒழுகிய தேவர்கள் மறைந்த பிறகு அவர்களிடம் உள்ள அன்பினால் இறைவன் அவர்களுடைய எலும்பை அணிகலனாக ஏற்றுக்கொண்டிருக்கிறான். இறந்து போன அன்புக் குழந்தையின் பொருளைத் தாய் பாதுகாத்து வைத்திருப்பது போன்றது இது. ஆகவே எலும்பைக் கண்டால் பக்தர்களுக்கு இறைவனுடைய நித்தியத் தன்மையும், பதவிகளின் நிலையாமையும், இறைவனுடைய தியாக சீலமும், அவனுடைய பெருங்கருணையும் புலனாகும். பிறருக்கோ, இவன் சுடுகாட்டு எலும்பைப் பொறுக்கி அணிந்து கொண்டிருக்கிறான் என்று தோன்றும்.

இறைவன் பேயோடு மயானத்தில் நடமாடுகிறவன். அவனுக்குத் தேவரென்றும் பேயென்றும் வேறுபாடு இல்லை. யார் அன்பு செய்கிறார்களோ அவர்களோடு இணங்கியிருப்பான். மயானத்தையே தன் இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான்; “கோயில் சுடுகாடு” என்று மாணிக்கவாசகர் சொல்கிறார் அல்லவா? பிற தேவர்கள் வாழ மாளிகைகளையும் அரண்மனைகளையும் கொடுத்துவிட்டு அவன் பேயோடு பேயாக மயானத்தில் வாழ்கிறான். எல்லோரும் கடைசிக் காலத்தில் போய்ச் சேரும் இடம் மயானம். எல்லோரையும் தனித் தனியே பார்க்காமல், எப்படியாவது அவர்களைச் சந்திப்பதற்கு, அவர்கள் இறுதியில் வந்து சேரும் இடத்தில் அவன் காத்திருக்கிறான். இந்த இடம் தூய்மையற்றதாயிற்றே, பேய் கூத்தாடும் இடம் ஆயிற்றே என்று அவன் எண்ணுவதில்லை. “தம்முடைய குழந்தைகள் வந்து சேருமிடம் அல்லவா?’ என்று எண்ணி அங்கே நடிக்கிறான். பேயைப்போல உலவுகிறான். அவனுடைய அணியும் கோலமும் பேய்க் கோலமாக இருக்கின்றன. அந்தக் கோலத்தைக் கண்ட அன்பர்கள் அவனுடைய எளிய தன்மையையும், பிறருக்கே நலம் வழங்கும் பெருந்தன்மையையும், பெருங்கருணையையும் எண்ணி உருகுவார்கள். பிறரோ, 'இவனோ பேயாண்டி’ என்று நகையாடுவார்கள்.