பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197


இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்புஅணிந்த
பேய்க்கோலம் கண்டார் பிறர்.

அவர்கள் இறைவனோடு ஒன்றிய கூட்டத்தினர் அல்லர். அவர்கள் புறத்தார்; அயலவர்; பிறர்.

அவர்கள் ஏன் இகழ்கிறார்கள்? இறைவனுடைய உண்மையை உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் அவர்கள். அவனைத் தெரிந்துகொள்வதற்கு அறிவாற்றல் இருந்தால் மட்டும் போதாது; அவனுடைய அருளாற்றலும் வேண்டும். வெறும் அறிவினால் விளங்காதது அருளினால் விளங்கும்.

“அருளாலே எவையும்பார் என்றான்—அதை
அறியாம லேஎன்றன் அறிவாலே பார்த்தேன்;
இருளான பொருள்கண்ட தல்லால்—கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி தோழி”

என்று தாயுமானவர் இந்தக் கருத்தைச் சொல்கிறார்.

இறைவனுடைய பெருமையையும், அவனுடைய திருக்கோலத்தின் உண்மையையும், அவனுடைய திருவிளையாடல்களின் உட்கருத்தையும் உணரும் ஆற்றல் இல்லாதவர்களாகிய பிறர் அவனை இகழ்கிறார்கள். "ஐயோ பாவம்! அவருடைய அறியாமையைப் பாருங்கள்” என்று அம்மை யார் சொல்கிறார்.

இவரைப் பொருள் உணர மாட்டாதார் எல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர்!

இறைவனே இகழ்வதற்குக் காரணம் இறைவனிடம் இகழ்ச்சிக்குரிய இயல்பு உண்டென்று கொள்ளக்கூடாது. இகழ்பவர்களுக்கு உண்மையை உணரும் வல்லமை இல்லை;