பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30. சச்சிதானந்த மூர்த்தி


இறைவன் பேய்க்கோலம் கண்டு எள்ளி நகையாடுவதைச் சொன்ன அம்மையார், மீட்டும் அந்தக் கோலத்தையே எண்ணிப் பார்க்கிறார். அவன் என்பை அணிந்து பேய்களோடு ஆடுகிறான். ஆடும் இடமாவது பார்க்க அழகாக இருக்கக் கூடாதா? மயானத்திலே தீயில் ஆடுகிறான். பேய்கள் நள்ளிரவில் ஆடும். அவனும் இரவில்தான் ஆடுகிறான். “நள்ளிரவில் நட்டம் புரிந்தாடும் நாதனே' என்று மாணிக்கவாசகரே சொல்கிறார். எல்லாம் ஒரே பயங்கரமான சூழ்நிலை.

"இப்படி ஆடுகிறானே, எதற்காக? அவனுக்கு இவ்வளவும் சிறுமையல்லவா? நாம் இப்படி எல்லாம் நினைக்கிறோம்.

அம்மையார் அவன் பெருமையை உடையவன் என்று சொல்கிறார். அந்தப் பெருமை அவனிடத்தில் ஈடுபட்டு அன்பு செய்பவர்களுக்குத்தான் தெரியுமாம். பிறருக்குத் தெரியாதாம்.

அப்படிப் பெருமையுடையவர் இப்படி ஏன் செய்ய வேண்டும்?

இறைவன் சோதி வடிவானவன். அவன் நெருப்பாகவும் நிற்பான். அவனுடைய அம்சம் பெற்ற ருத்திரமூர்த்தி ஒருவரைக் காலாக்கினி ருத்திரர் என்று சொல்வார்கள்.

அக்கினி எல்லாவற்றையும் அழிப்பது; தூய்மைப்படுத்துவது; தூய்மையை உடையது. அக்கினியில் அழுக்குச் சார்ந்தாலும் அழகு சார்ந்தாலும் இரண்டையும் அது நீறாக்கிவிடும். அழுக்கினால் அது அழுக்காவதில்லை. அழகினால் அது அதிக அழகு பெறுவதில்லை. அக்கினியைத் தேஜஸ் (தேயு) என்று