பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201

சொல்வார்கள். தேவர்களுக்கெல்லாம் வாயாக இருப்பது அது. அதனால் தேவர்களை நோக்கி வழங்கும் ஆகுதிகளே அக்கினியில் பெய்கிறார்கள்.

அத்தகைய தூய்மையையுடைய அக்கினி எந்த இடத்தில் இருந்தாலும் தூய்மை கெடுவதில்லை. மயானத்தில் இருந்தாலும், சமையலறையில் இருந்தாலும், வேள்விக்குண்டத்தில் இருந்தாலும் அக்கினி அக்கினிதான். அது என்றும் தூய்மை உடையது.

அந்த அக்கினியில் இறைவன் ஆடுகிறான். அந்த அக்கினி அவனை நீறாக்குவதில்லை; சுடுவதே இல்லை. இந்த அக்கினி பெளதிக அக்கினி; அதாவது பஞ்சபூதங்களில் ஒன்றான அக்கினி. இறைவனே எல்லாவற்றுக்கும் மேலான தேஜஸ் ஆக இருப்பவன். சர்வப் பிரளயகாலத்தில் எல்லாவற்றையும் எரித்து விடும் மகாதேஜஸ் அவன். அந்தக் காலத்தில் இந்த அக்கினியும் அழிந்தொழியும். ஆகவே அவனை அக்கினி ஒன்றும் செய்யாது.

அவன் அழிவற்றவன் என்பதை அவன் அக்கினியில் ஆடும் செய்கை காட்டுகிறது.

இரவில் அவன் ஆடுகிறான். எல்லாரும் உறங்கும் சமயம் அது. தன்னுடைய குழந்தைகளாகிய ஆருயிர்கள் எந்தச் செயல்களையும் செய்யாமல், புண்ணிய பாவங்களைப் புரியாமல் உறங்கும்போது ஆண்டவன் ஆடுகிறான். தன்னுடைய குழந்தைகள் குறும்பு செய்வதையும் சண்டையிடுவதையும் மறந்து உறங்கும்போது தாய் களித்திருப்பது போல ஆண்டவன் இருக்கிறான். இந்த உறக்கத்தைத் தினப் பிரளயம் என்பர். எல்லா உயிர்களும் இறைவன் திருவடிக் கீழ் ஒடுங்கிக் கிடக்கும் சர்வப் பிரளயம் போன்றது அது. பிரளய காலத்திலும் இறைவன் மகிழ்ந்து ஆடுகிறான். எல்லா உயிரும் இன்பதுன்ப நுகர்ச்சியின்றி, நன்மை தீமை செய்யாமல் அடங்கிக் கிடக்கும் காலத்தில் இறைவன் ஓய்வு