பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202


பெற்றவனைப் போலக் களிக்கூத்தாடுகிறான். எல்லாம் ஒடுங்கவும் தான் மட்டும் நித்தியப் பொருளாக நின்று இயங்குவதைக் குறிப்பது அந்தச் செயல்.

வலிய பேயும் அவனும் சேர்ந்து மயானத்தில் ஆடுகிறார்கள். மயானமும் ஒரு கோயிலுக்கு ஒப்பானது. மக்கள் ஒரு பிறவியில் இன்பதுன்பங்களை அநுபவித்துப் பிறகு இறக்கிறார்கள். இறப்பும் ஒருவகையில் உறங்குவதைப் போன்றது. 'உறங்குவது போலும் சாக்கா டுறங்கி, விழிப்பது போலும் பிறப்பு” என்னும் குறளினால் இதனை உணரலாம். எல்லோரும் உறங்கும் இரவில் இறப்பாகிய உறக்கத்தைப் பெறுவதைக் காட்டும் மயானத்தில் இறைவன் ஆடுவது அவன் எப்போதும் இயங்கிக் கொண்டு இருக்கிறான் என்பதைக் காட்டுகிறது.

நம்முடைய உடம்பிலுள்ள உறுப்புக்களை நாம் பயன் படுத்துகிறோம். சில சமயங்களில் சில உறுப்புக்களைப் பயன் படுத்துவதில்லை. நடக்காமல் இருக்கும்போது கால் இயங்குவதில்லை. கண்ணை மூடி உறங்கும்போது கண் இயங்குவதில்லை. இப்படியே ஒவ்வோர் உறுப்பும் இயக்கமில்லாத காலம் உண்டு. உறங்கும்போது எல்லா உறுப்புக்களும் இயங்காமல் இருக்கின்றன. ஆனால் இதயம் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மற்ற அங்கங்கள் இயங்கும் போதும் அது இயங்குகிறது. அவை செயல் செய்வதின்றிச் சும்மா இருந்தாலும் அது சும்மா நிற்பதில்லை. இதயம் இயங்காமல் உடம்பில் உயிர் வாழ்வதில்லை.

இறைவனும் இதயத்தைப் போல இருக்கிறான். அவன் இயங்குவதனாலே எல்லாப் பொருள்களும் இயங்குகின்றன. அவன் தன் இயக்கத்தால் மற்றவற்றை இயக்குகிறான். அவன் இன்றி எதுவும் இயங்காது. மற்றவை யாவும் இயங்காமல் ஒழிந்தாலும் அவன் தன் இயக்கத்தை, தன் ஆட்டத்தை நிறுத்துவதில்லை.