பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207

மெய்யடியாராக உள்ளவர்கள். அவர்கள் மோட்சத்தைக் கூட விரும்புவதில்லையாம்.

"கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினர்"

என்பது பெரியபுராணம்.

ஆகவே, மனித மனம் வளர்ந்திருக்கிறது. அது பின்னும் வளர வளர மனிதன் கடவுளை உணர்ந்துகொள்கிறான்; கடைசியில் கடவுளோடு கலந்து கரைந்துவிடுகிறான். மனிதன் ஒருவனுக்கு மட்டும் வாய்த்த சிறப்பு இது.

காரைக்கால் அம்மையார் மனித வடிவத்தை விடுத்தவர். அவர் நிலை என்ன? அவர் வடிவம் பேயாக இருந்தாலும் மனம் மனித மனந்தான். சாமானிய மனித மனம் அன்று; இறையருளில் ஈடுபட்ட உயர்ந்த மனம் அது.இறைவனிடம் வைத்த அன்புக்குத் தடையாகத் தன் பெண் வடிவம் இருக்கக்கூடாது என்றே அதை உதறித் தள்ளினார். அவருடைய மனம் இப்போது தடையைவிலக்கிவிட்ட பெருமிதத்தோடு இருக்கிறது. ஆண்டவனிடத்தில் வைத்த அன்பு இப்போது வளர்ந்து வருகிறது. அதனால் அவருடைய நெஞ்சம் மகிழ்கின்றது. 'மனித வடிவம் போயிற்றே' என்று அவலமுறாமல், அது போனதனால்தான் மகிழ்ச்சியை அடைகிறது. மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம். அந்தக் கனத்தை உதறிவிட்டு வந்ததனால் இப்போது பயம் இல்லை. எங்கே வேண்டுமானாலும் போகலாம்: என்ன வேண்டுமானலும் செய்யலாம். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆண்டவனிடம் அன்பை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போவதனால் மனத்திலே மேலும் மேலும் மகிழ்ச்சி பெருகுகிறது. இறைவனாகிய பெரிய பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது. இனி என்ன கவலை?