பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

இந்த நிலையில் நின்று அம்மையார் தம் நெஞ்சைப் பார்த்துப் பேசுகிறார்.

முன்பெல்லாம் தெளிவு பெறாமல் அறியாமை காரணமாக, என்னாகுமோ என்று அஞ்சினாயே! பேய்வடிவம் பெற்றால் நன்மை உண்டாகுமோ என்று ஐயுற்றாயே! இப்போது எப்படி இருக்கிறோம்? யாராலும் நமக்கு அச்சம் இல்லை. தேவர்களுக்குக்கூட இந்த நிலை கிடைக்குமா? நீ இப்போது மகிழ்கிறாயே! இதை எண்ணிப் பார்.’

மகிழ்தி மடநெஞ்சே!

மனித வடிவத்தோடு இருக்கும் அடியவர் இறைவனைத் தொழுது இன்புறுகிறார்கள். அதனால் அவர்கள் பெருமை அடைகிறார்கள். விளக்கம் பெறுகிறார்கள். இறைவன் அவர்களை இனம் கண்டு கொள்கிறான். நமக்கு இப்போது என்ன குறை வந்துவிட்டது? உண்மை அடியார்களாகிய மனிதர்களுக்கு உள்ள இன்ப நிலை நமக்குந் தான் இருக்கிறது. அதில் வேறுபாடு இல்லையே! மனிதர்களில் சிலர் இறைவனுக்கு அடியார்கள் என்று விளங்குவதைப் போலவே நாமும் இருக்கிறோம். நீ அவர்களைப் போலவே திகழ்கிறாய்.

மானிடரின் நீயும் திகழ்தி.

[மானிடரின்-மனிதர்களைப் போல.]

“இவ்வாறு மகிழ்வதற்கும் திகழ்வதற்கும் காரணம் என்ன? பாதுகாப்பான இடத்தைச் சேர்ந்து விட்டால் ஒரு கவலையும் இராது. சேரிடம் அறிந்து சேர்ந்தவர்கள் நன்மையை அடைவார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. நீ சாமானியமான பாதுகாப்பைப் பெறவில்லை. எந்த இடத்தை அடைந்தால் எந்த விதமான இன்னலும் அணுகாதோ, அந்த இடத்தைச் சேர்ந்திருக்கிறாய்.”